| ADDED : ஜன 27, 2024 05:34 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து பணிமனைகளில் பஸ்களுக்கான உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகவே உள்ளது. இதனால் எப்போதும் ஒரு பணிமனைக்கு இரண்டு, மூன்று பஸ்கள் தரச்சான்று, பழுது என நிறுத்தி வைக்கபட்டு, அதன் பாகங்களை பழுதான பஸ்களுக்கு மாற்றி பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது.மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் காரியப்பட்டி 19, அருப்புக்கோட்டை 69, விருதுநகர் 71, ராஜபாளையம் 1 - 48, ராஜபாளையம் 2 - 30, சாத்துார் 57, சிவகாசி 65, ஸ்ரீவில்லிப்புத்துார் 43, வத்தராயிருப்பு 16 என மொத்தம் 418 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பணிமனைகளில் ஒரங்கட்டப்பட்ட 15 ஆண்டுகளை கடந்த பஸ்களை இயக்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதன் மூலம் 20 ஆண்டுகள் வரை இயக்க முடியும் என்பதால் ஒரங்கட்டப்பட்ட பஸ்கள் நகர், ஊரகப்பகுதிகளுக்கு தொடர்ந்து இயக்கப்படுகிறது.புறநகர், ஊரக பகுதிகளில் நல்ல ரோடுகள் அமைக்கப்படாததால் அவ்வழியாக பஸ்கள் செல்லும் போது ஜன்னல், கைப்பிடி கம்பிகள் கழன்று விழுகிறது. உள்பாகங்களிலும் பழுது ஏற்பட்டு பாதிக்கப்படுகிறது. ஆனால் இந்த பஸ்களை தொடர்ந்து பராமரிப்பதற்கு தேவையான உதிரிபாகங்கள் எதுவும் கொள்முதல் செய்து வழங்கப்படவில்லை என ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பஸ்களில் பழுது ஏற்பட்டால் அதை சரிசெய்வதில் தொய்வு ஏற்பட்டு நிறுத்தி வைக்க வேண்டியுள்ளது. இந்த பழுதான பஸ்சை ரோட்டில் இயக்கும் போது பழுது ஏற்பட்டு விபத்து நிகழ்ந்து பயணிகள், சக வாகன ஒட்டிகள் பலியாகும் நிலை ஏற்படுகிறது.பழுதான பஸ் இயக்கப்பட்ட பகுதிக்கு மாற்று பஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் உதிரிபாகங்கள் இல்லாததால் பழுதை நீக்க முடிவதில்லை. மாறாக பணிமனைகளில் கூடுதல் பஸ்களை தவிர கூடுதல் பஸ்கள் நிறுத்தி வைக்கின்றனர். இந்த பஸ்களில் இருந்து உதிரிபாகங்களை எடுத்து பழுதை சரிசெய்ய வேண்டியுள்ளது. இதனால் பணிமனைகளில் உள்ள பஸ்களின் எண்ணிக்கையை பொருத்து இரண்டு, மூன்று பஸ்களை கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளது.மதுரையில் இருந்து அதிகாரிகள் திடிரென ஆய்வு மேற்கொள்ள வந்தால் மாற்று பஸ்களின் எண்ணிக்கையை விட கூடுதல் பஸ்கள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது எதற்கு என கேள்வி எழுப்பும் போது பழுது, தரச்சான்று பெறுவதற்கு என நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்களுக்கு காரணம் கூறி சமாளிக்கின்றனர். உதிரிபாகங்கள் பற்றாக்குறை என்பதை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதில்லை. எனவே அரசு பணிமனைகளைக்கு தேவையான உதிரிபாகங்களை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.