| ADDED : நவ 22, 2025 12:28 AM
விருதுநகர்: ''விவசாயிகளின் வருவாய் ஆதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 ஐ நிறுத்த வேண்டும்,'' என, விருதுநகரில் தோட்டக்கலை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி மாதம் இரு முறை ஒவ்வொரு கிராமங்களையும் கள ஆய்வு செய்ய வேண்டும். தோட்டக் கலை விவசாயிகளை பார்த்து திட்டங்கள், பயிர் மேலாண்மை குறித்து எடுத்துக்கூற வேண்டும். தற்போதைய தி.மு.க., ஆட்சியில் இத்திட்டம் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 என புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் ஆகிய நான்கு துறைகளின் பணியை தோட்டக்கலை அலுவலர்கள் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையின் கீழ் வரும் தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள் போன்ற பயிர்களுக்கு என்ன தீர்வு என்பது தோட்டக்கலை அலுவலர்களுக்கு தெரியாது. தோட்டக்கலை பயின்றவர்களுக்கு பழம், காய்கறி, மலர் பயிர்கள், தென்னை, மூலிகைப் பயிர்கள் போன்றவற்றின் தொழில் நுட்பங்களை எடுத்துக் கூற முடியும். தோட்டக்கலை அலுவலர்கள் தோட்டக்கலையில் தான் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி., படித்திருப்பர். துறை ஒருங்கிணைப்பு மூலம் அனைத்து வேளாண் சகோதரத் துறைகளையும் ஒருங்கிணைப்பதால் நிறைய பேர் பணியிட மாற்றம் ஏற்படும். பதவி உயர்வு பாதிக்கப்படும். குறிப்பாக விவசாயிகளுக்கு சரியான தொழில்நுட்பங்களை எடுத்துக் கூற முடியாமல் அவர்களது வருவாய் ஆதாரம் பாதிக்கப்படும். எனவே வல்லுனர் குழு அமைத்து இதில் உள்ள பாதக அம்சங்களை பார்க்க வேண்டும். இடமாற்றத்தை கைவிட வேண்டும் என்றார்.