| ADDED : ஏப் 16, 2024 04:43 AM
சென்னை : தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்தி:தமிழகம் முழுதும் இயங்கி வரும் 534 வாகன புகை பரிசோதனை மையங்களில், ஒரு சிலவற்றில் வாகனங்களை கொண்டு வராமலேயே, பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தன.இதையடுத்து, கடந்த 13ம் தேதி, அனைத்து வாகன புகை பரிசோதனை மையங்களும் அதிகாரிகளால் திடீர் தணிக்கை செய்யப்பட்டது.அதில், இந்த திடீர் தணிக்கையில், 50 புகை பரிசோதனை மையங்களில், அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இல்லாமல் இருந்தது, உரிமம் புதுப்பிக்கப்படாமல் இயங்கி வந்தது உள்ளிட்ட விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த மையங்களின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த, தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளது. அதனடிப்படையில், ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடிய அலைபேசியை விரைவில் கட்டாயமாக்கவும், வாகன புகை சோதனை செய்வது குறித்த ஒரு வீடியோவும், வாகனங்கள் அந்த சோதனை மையத்திற்கு கொண்டு வந்து சோதனை செய்யப்படுவதை துல்லியமாக காட்டும் புவியிடக் குறியீடு கொண்ட புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்தால் மட்டுமே, சான்றிதழை பதிவிறக்கம் செய்ய முடியும் என்ற நிலைப்பாடை விரைவில் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில், இந்த வாகன புகை பரிசோதனை மையங்களில் செயல்பாடு செம்மைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.