உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குற்றத்தை ஒத்துக்குறீங்களா? - நீதிபதி நான் நிரபராதிங்க! - செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

குற்றத்தை ஒத்துக்குறீங்களா? - நீதிபதி நான் நிரபராதிங்க! - செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

சென்னை: சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்தாண்டு ஜூனில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதிலிருந்து விடுவிக்கக் கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டு பதிவுக்கு உத்தரவிட்டது.அதையடுத்து, குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்கக்கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அந்த மனு மீது நடந்த இரு தரப்பு வாதங்களுக்குப் பின், குற்றச்சாட்டு பதிவுக்காக செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும், அப்போது குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக் கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும்,நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை எடுக்கப்பட்ட தோற்றத்தில், செந்தில் பாலாஜி காணப்பட்டார். அவரது தரப்பில் வழக்கறிஞர்கள் மா.கவுதமன், பரணிகுமார் மற்றும் அமலாக்கத் துறை தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர்.விசாரணையின்போது, செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த குற்றச்சாட்டுக்களை, நீதிபதி எஸ்.அல்லி, முதலில் ஆங்கிலத்திலும், பின் தமிழிலும் படித்தார். பின், செந்தில் பாலாஜியை பார்த்து, ''உங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொள்கிறீர்களா?'' என கேட்டார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, ''அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். நான் நிரபராதி; எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை. என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை.''இந்த வழக்கு புனையப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடரப்பட்ட பொய் வழக்கு. சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புகிறேன்,'' என்றார்.இதையடுத்து, செந்தில் பாலாஜி மீது, குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. பின், சாட்சி விசாரணைக்காக வழக்கை, வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்றைய தினம் அமலாக்கத் துறையின் 1 முதல் 3 சாட்சிகள் ஆஜராக, சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.அதுவரை, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, 54வது முறையாக நீட்டித்தும், குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.குற்றச்சாட்டு பதிவுக்காக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை