உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., சொத்து விபரங்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., சொத்து விபரங்கள்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவு துாத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்

சென்னை: துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்து விபரங்கள் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடியில், 2018ல், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிரான போராட்டத்தில், துப்பாக்கி சூடு நடந்தது. இதில், 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில், வழக்கை முடித்து வைத்தது.

தடை உத்தரவு

இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஹென்றி திபேன் ஆஜராகி, ''துப்பாக்கி சூடு நடத்தும் முன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு, எங்கெல்லாம் அமலுக்கு வந்துள்ளது என, போலீசார் தெரிவிக்கவில்லை. ''சம்பவம் நடந்த இடத்திலிருந்து, 7 கி.மீ., துாரத்தில் உள்ள வீட்டில் இருந்த ஒருவர், துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார். ''நீண்ட துாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. சம்பவம் நடந்த போது இருந்த போலீஸ் அதிகாரிகள், போலீசார், சி.பி.ஐ.,யின் இறுதி அறிக்கையில் சேர்க்கப்படவில்லை,'' என்றார்.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: சம்பவம் நடந்து எத்தனை ஆண்டுகளாகிறது. இதுவரை, சி.பி.ஐ.,யால் வழக்கு விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சி.பி.ஐ., துணை போவதாகவே நீதிமன்றம் கருதுகிறது. புழுவை நசுக்குவது போல பொதுமக்களை நசுக்கியுள்ளனர். இதில், யார் எல்லாம் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர் என்று கூட சி.பி.ஐ., விசாரிக்கவில்லை.துப்பாக்கி சூடு சம்பவத்தை நியாயமாக விசாரிக்கவில்லை; அதிகாரிகள் தவறிழைக்கவில்லை என, எப்படி அறிக்கை அளிக்க முடியும். சுதந்திரமான விசாரணை அமைப்பின் செயல், முடிவு எல்லாம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. மிக திறமையான அதிகாரிகளை கொண்ட, ஒரு சுதந்திரமான விசாரணை அமைப்பின் முடிவுகளை பார்க்கும்போது, அதன் திறமையின்மையை காட்டுகிறது.துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டது முன்கூட்டியே திட்டமிட்டதாக தெரிகிறது. ஒரு தொழிலதிபர் விரும்பிய தால், துப்பாக்கி சூடு நடத்தி இருக்கின்றனர். அதற்கு போலீசார் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். அமைதியான முறையில், 100 நாள் போராட்டத்தை நடத்திய போது, அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுஉள்ளது.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, 7 கி.மீ., துாரத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்தவர், எப்படி துப்பாக்கி சூட்டிற்கு பலியாகியிருக்க முடியும். இவற்றை சி.பி.ஐ., ஏன் விசாரணைக்குள் கொண்டு வரவில்லை.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.சி.பி.ஐ., தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, ''சி.பி.ஐ., தாக்கல் செய்த இறுதி அறிக்கை மற்றும் மறு விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையையும், விசாரணை நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும் போது, எப்படி சி.பி.ஐ., மீது குற்றம்சாட்ட முடியும்,'' என்றார்.

கண்டனம்

இதை கேட்ட நீதிபதிகள், 'விசாரணை முடிவில் தாக்கல் செய்யப்பட்ட இறுதி அறிக்கையில், ஒருவர் பெயர் கூட சேர்க்கப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக சேர்க்கப்படாத நிலையில், யாருக்கு எதிராக வழக்கு நடத்துவீர்கள்' என, சி.பி.ஐ.,க்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.'இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். 'அந்த அதிகாரிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் பெயர்களில், துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்த சொத்து விவரங்கள், தற்போதுள்ள சொத்து விவரங்களை சேகரித்து, லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை