உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கன்டெய்னர் லாரி மீது உரசிய பஸ் 4 கல்லுாரி மாணவர்கள் உயிரிழப்பு

கன்டெய்னர் லாரி மீது உரசிய பஸ் 4 கல்லுாரி மாணவர்கள் உயிரிழப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் தனியார் பேருந்து உரசியதில், படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த நான்கு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் அருகே ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த கமலேஷ், 20, சோத்துப்பாக்கம் மோனேஷ், 19, மோகல்வாடி தனுஷ் 19, ரவிசந்திரன், 20, ஆகியோர், மதுராந்தகத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இளங்கலை பயின்று வந்தனர்.

படியில் தொங்கினர்

கல்லுாரிக்கு செல்வதற்காக, சோத்துப்பாக்கம் நிறுத்தத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறினர். பேருந்தினுள் 60க்கும் அதிகமான பயணியர் இருந்ததால், மாணவர்கள் படியில் தொங்கி கொண்டு சென்றனர்.திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, மேல்மருவத்துார் அடுத்த, சிறுநாகலுார் பாப்பாத்திகுளம் பகுதியில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர் லாரியின் பக்கவாட்டில் பேருந்து உரசியது.ஓட்டுனர், பேருந்தை வேகமாக ஓட்டி வந்ததாலும், அஜாக்கிரதையாக செயல்பட்டதாலும், பேருந்தின் பின்பக்க படிக்கட்டுகளில் தொங்கி யபடி வந்த நான்கு மாணவர்களின் தலைகளும், கன்டெய்னர் லாரியில் மோதின.முதலில் கமலேஷ் விழ, அடுத்தடுத்து மூன்று பேரும் விழுந்தனர். இதில், கமலேஷ், மோனிஷ், தனுஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து அறிந்த மேல்மருவத்துார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய ரவிசந்திரனை மீட்டு, '108 ஆம்புலன்ஸ்' வாயிலாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.ஆனால், செல்லும் வழியிலே ரவிசந்திரன் பரிதாபமாக இறந்தார். மற்ற மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையோரம் லாரியை நிறுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனர் முத்துகுமார், தனியார் பேருந்து ஓட்டுனர் சுந்தரமூர்த்தி, நடத்துனர் ராமசந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நிவாரணம் அறிவிப்பு

விபத்தில் இறந்த நான்கு மாணவர்களின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயை, அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

அதிகரிக்கும் சாலையோர கடைகள்

சென்னை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடியில் இருந்து மாமண்டூர் வரை 45க்கும் அதிகமான சாலையோர கடைகள் உள்ளன. இங்கு வாகனங்களை நிறுத்த போதிய வசதி இல்லாததால், சாலையோரம் நிறுத்தி கடைகளுக்கு செல்கின்றனர். இதனாலே, இது போன்ற விபத்துகள் நடக்கின்றன. சாலையோர கடைகளை முறைப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை