சென்னை : நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட 3.99 கோடி ரூபாய், பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்துச் செல்லப்பட்டது என, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் பறக்கும் படை அதிகாரி செந்தில் பாலாமணி அளித்துள்ள புகாரின்படி, முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்திருப்பதாவது:சென்னை சிட்லபாக்கம் உதவி வேளாண் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். தற்போது, தேர்தல் பறக்கும் படை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளேன். என்னுடன் தலைமை காவலர் பிரபாகரன், காவலர் குணசேகரன், வீடியோகிராபராக மோகன்ராஜ் ஆகியோர் பணிபுரிகின்றனர். லோக்சபா தேர்தலை ஒட்டி, வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில், ஏப்., 6ல் இரவு 8:30 மணியளவில், தாம்பரம் செக்போஸ்ட் அருகே, வாகன சோதனையில் ஈடுபட்டோம். அப்போது, தாம்பரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் என்னை தொடர்பு கொண்டார். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 'ஏ - 1' கோச்சில், படுக்கை எண் 26, 27, 28ல் பயணம் செய்பவர்கள் கட்டு கட்டாக பணம் எடுத்துச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.நாங்கள் அந்த ரயிலில் ஏறி, மூன்று படுக்கையிலும் இருந்த, சென்னை அகரம் ஜவஹர் நகரைச் சேர்ந்த சதீஷ், 33; நவீன், 31, மற்றும் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள், 26, ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தோம். அவர்களிடம், 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்தன.மூவரையும் தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தோம். அவர்களிடம், 3.99 கோடி ரூபாய் இருந்தது. சதீஷிடம் விசாரித்த போது, 'சென்னை கீழ்ப்பாக்கம் தாசபிரகாஷ் ஹோட்டல் அருகே, திருநெல்வேலி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 'புளூ டைமண்ட்' என்ற ஹோட்டல் உள்ளது. அதில், நான் வேலை செய்து வருகிறேன். எங்களிடம் ஜெய்சங்கர் என்பவர், நான்கு பைகளில் 500 ரூபாய் நோட்டு கட்டுகளை கொடுத்து அனுப்பினார். இந்த பணம் நெல்லை வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்றோம். எங்கள் ஹோட்டல் உரிமையாளர் நயினார் நாகேந்திரன், நெல்லை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடுகிறார். இந்த பணம் அனைத்தும் எங்கள் ஹோட்டல் உரிமையாளருக்கு ஓட்டளிக்க, வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்றோம்' என்று கூறினார்.மேலும், தான் பா.ஜ., உறுப்பினர் என்றும், நயினார் நாகேந்திரன் அடையாள அட்டையின் நகலையும் என்னிடம் சதீஷ் சமர்ப்பித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.