உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  வளர்ப்பு யானையாக மாற்றியிருந்தால் இறந்திருக்காது வனவிலங்கு ஆர்வலர்கள், பொது மக்கள் ஆதங்கம்

 வளர்ப்பு யானையாக மாற்றியிருந்தால் இறந்திருக்காது வனவிலங்கு ஆர்வலர்கள், பொது மக்கள் ஆதங்கம்

கூடலுார்: 'கூடலுாரில் பிடிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானையை, வளர்ப்பு யானையாக மாற்றியிருந்தால் உயிர் இழக்காமல் பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருக்கும்,' என, வன விலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். கூடலுார், ஓவேலி பகுதியில், 12 பேரை தாக்கி கொன்ற, 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானையை செப்., 23ம் தேதி, வனத்துறையினர், முதுமலை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை அபயாரண்யம் வளர்ப்பு யானைகள் முகாமில் அமைக்கப்பட்ட கராலில் அடைத்து கண்காணித்து வந்தனர். 'இந்த யானை வனப்பகுதியில் விடப்படும்,' என, வன அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அதனை முதுமலை வளர்ப்பு யானையாக மாற்ற மக்கள் வலியுறுத்தினர். திடீரென இடம் மாற்றப்பட்ட யானை இதனிடையே, வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவை தொடர்ந்து, கராலில் இருந்த யானைக்கு அக்., 24ம் தேதி, ரேடியோ காலர் பொருத்தி நள்ளிரவில் அதனை லாரியில் ஏற்றி, கர்நாடகா வழியாக, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்கு கொண்டு சென்று, 25ம் தேதி நள்ளிரவு அப்பர் கோதையார் வனப்பகுதியில் விடுவித்தனர். வீடியோ காலரில் அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். யானை ஆரோக்கியத்துடன் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். வழுக்கி விழுந்து இறந்ததால் சோகம் இந்நிலையில், களக்காடு முண்டந்துறை பகுதியில் இரு தினங் களுக்கு முன் பெய்த பலத்த மழையின் போது, வழுக்கி விழுந்த ராதாகிருஷ்ணன் என்ற காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்தில் விடப்பட்ட ஒரு மாதத்திற்குள், யானை உயிரிழந்த சம்பவம், கூடலூர் வன ஊழியர்கள், விலங்கு நல ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'ஓவேலியில், பிடிப்பட்ட ராதாகிருஷ்ணன் யானை மீண்டும் வனப்பகுதியில் விடாமல் வளர்ப்பு யானையாக மாற்ற வலியுறுத்தினோம். வனத்துறையினர், இதனை ஏற்காமல் யானையை வனப்பகுதியில் விடுவித்தனர். தற்போது அந்த யானையின் இறப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வனத்துறையினர் இதனை முகாம் யானையாக மாற்றி இருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம். அதன் இறப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,' என்றனர்.

உடல், மனதளவில் பாதிப்பு ஏற்படும்...

கூடலுார் பிரகர்தி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர், கால்நடை டாக்டர் சுகுமாரன் கூறுகையில், ''மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை, வனத்துறை பிடித்தபின், அதனை வேறு வனப்பகுதியில் விடுவதன் மூலம் அவை சுதந்திரமாக இருக்கும் என, எதிர்பார்க்கின்றனர். அதற்கு அவை ஏற்கனவே, வசித்த நிலப்பரப்பை சார்ந்த வேறு பகுதியில் விடுவது அவசியம். மாறாக, மாறுபட்ட வேறு வனப் பகுதியில் விடுவதன் மூலம், அவை மனதளவிலும், உடல் அள விலும் பாதிக்கும் சூழல் உள்ளது. இந்த சூழ்நிலையால் தான், ராதா கிருஷ்ணன் யானை பாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது, விழுந்து உயிரிழந்திருக்கலாம். இதன் உயிரிழப்பு ஈடு செய்ய முடியாது. இங்குள்ள, பொதுமக்கள், வன ஊழியர்களின் கோரிக்கை படி, இந்த யானையை முகாம் யானையாக மாற்றி இருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்கலாம். வரும் நாட்களில் யானைகளை இடம் மாற்றுவதை தவிர்க்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை