சொன்னபடி செய்யுங்கள்
அறிஞர் ஒருவர் ஒரு ஊரில் தங்கியிருந்த போது அங்குள்ள மக்கள் ஆடு, மாடுகளை பலியிட்டு சாப்பிடுவதைக் கண்டார். ''இந்த பாவத்தை இனியும் செய்யாதீர்கள்'' என அறிவுரை வழங்கினார். 'இனி இப்படி செய்ய மாட்டோம்' என அவர்கள் உறுதியளித்தனர். ஆனால் சில நாட்கள் கழிந்ததும் மீண்டும் பலியிடத் தொடங்கினர். அதைக் கேள்விப்பட்ட அறிஞர் மக்களை சந்தித்த போது நீதிக்கதையை அவர்களுக்குச் சொன்னார். ஒரு தந்தைக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவனை அழைத்து வயலுக்கு சென்று நீர் பாய்ச்சு என்றார். அவனோ முடியாது என மறுத்தான். இளையவனை அழைத்து நீ சென்று வயலுக்கு நீர் பாய்ச்சு என்றார். இதோ செல்கிறேன் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டான். தந்தையை எதிர்த்து பேசி விட்டோமே என வருந்திய மூத்தவன் வயலுக்கு புறப்பட்டான். இளைய மகனைப் போல நீங்கள் பண்புடைய சொற்களை பேசுகிறீர்கள். ஆனால் கடைப்பிடிக்க மறுக்கிறீர்களே எனக் கேட்டார். வெட்கத்தில் தலை குனிந்த மக்கள் தவறை உணர்ந்து திருந்தினர்.