உள்ளூர் செய்திகள்

நினைவில் இருக்கும்

நபிகள் நாயகத்துடன் ஒருமுறை முஆத் பின் ஜபல் (ரலி) என்பவர் வண்டியில் சென்று கொண்டிருந்தார். அவர் முன்னாலும், முஆத் பின்னாலும் இருந்தனர். நாயகம் அவரை சத்தமாக அழைத்தார். அதற்கு முஆத், ''நான் உங்கள் பின்னால் தான் இருக்கிறேன், என்ன சொல்லுங்கள்'' எனக் கேட்டார். அதற்கு எதுவும் பேசவில்லை. மீண்டும் அழைத்தார். இப்போதும் முஆத், ''இதோ... நான் உங்கள் அருகில் தான் உள்ளேன். சொல்ல வேண்டியதை சொல்லுங்கள்'' என்றார். மீண்டும் அமைதியானார். சிறிது துாரம் வண்டி கடந்தது. மீண்டும் அவர் அழைக்கவே, ''என்னிடம் என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள். உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலாக இருக்கிறேன்'' என்றார். ''முஆதே... இறைவனுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா? மக்கள் அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனுக்கு இணையாக வேறு யாரையும் கருதக் கூடாது'' என்றார்.இந்த விஷயத்தை முன்பே சொல்லாமல், மூன்று முறை அழைத்து ஏன் கூறினார் தெரியுமா... முதல் தடவையில் இக்கருத்தை சொன்னால் காலத்தில் மக்கள் மறந்து விடலாம். மும்முறை அழைத்துச் சொன்னதன் மூலம் இக்கருத்து நன்றாக நினைவில் இருக்கும். இதனால்தான் அவர் இந்த உத்தியைப் பயன்படுத்தினார்.