உள்ளூர் செய்திகள்

கடிதம் சொன்ன சேதி

முஸ்லிம்களின் எதிரிகளான குரைஷி இனத்தவர் நபிகள் நாயகத்திற்கு எதிராக போருக்கு தயாராகும் செய்தி வெளியானது. உடனே அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷூ என்பவர் தலைமையில் சிலரை உளவு பார்க்க 'நக்லா' என்ற பகுதிக்கு அனுப்பினார். மேலும் அப்துல்லாஹ்விடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அதை படிக்கச் சொல்லியிருந்தார். அதன்படி படித்தபோது அதில், 'நக்லாவில் தங்கி இருந்து குரைஷிகளின் நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டியது உம் பொறுப்பு' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அப்துல்லாஹ் போகும் போது தற்செயலாக வழியில் ஷாம் தேசத்தில் இருந்து சரக்குகளுடன் வந்த குரைஷி வியாபாரக் கூட்டத்தினரை தாக்கினார். அதில் இப்னுல் ஹல்ரமி என்னும் குரைஷி கொல்லப்பட்டதோடு இருவர் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்கள் கைவசம் இருந்த சரக்குகளும் அகப்பட்டன. உடனே மெதீனா திரும்பியவர் நாயகத்தை சந்தித்து நடந்தவற்றை தெரிவித்ததோடு கைப்பற்றிய பொருட்களையும் சமர்ப்பித்தார். ஆனால் அவரோ, ''ஏன் இப்படி செய்தீர்கள். இவ்வாறு செய்வதற்கு உமக்கு அனுமதிக்கவில்லையே'' என்று சொல்லி பொருட்களை ஏற்கவில்லை. அப்துல்லாஹ்வின் செயலை மற்ற தோழர்களும் கண்டித்தனர். இச்செயல்களால் குரைஷிகளின் கோபம் மேலும் கூடியது.