உள்ளூர் செய்திகள்

உண்மை சுடுகிறதோ?

க.மகேஷ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முதல் கட்ட தேர்தலில், தமிழகத்தில் துவங்கிய மோடி எதிர்ப்பு அலை, நாடு முழுதும் வீசிக் கொண்டிருப்பதை உணர்ந்ததன் விளைவுதான், மோடியின் இஸ்லாமியர் வெறுப்பு பேச்சு. இதன் வாயிலாக, நவீன கோயபல்ஸ் மோடிக்கு, மக்கள் உரிய பாடம் கற்பிப்பர் என்பது உறுதி' என, அறிக்கை ஒன்றின் மூலம் அங்கலாய்த்து, ஆனந்த கூத்தாட துவங்கி உள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.இவரது ஆனந்த தாண்டவத்தை தகர்க்கும் விதமாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பொருளாதார மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமிடைமன், 'இந்தியாவில் நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும், பிரதமர் மோடி தந்திருப்பது நம்பமுடியாத பணி. அதில் சிறிதாவது, அமெரிக்காவில் நாம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. 40 கோடி மக்களை அவர் வறுமையில் இருந்து மீட்டுள்ளார். 'நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம். 40 கோடி மக்கள் கழிப்பறை வசதியை பெற்றுள்ளனர். இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி நாம் விரிவாக பேச வேண்டும். இந்தியாவில் 70 கோடி மக்கள் வங்கிக் கணக்கை தொடங்கிஉள்ளனர். இதன் வாயிலாக பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன. 'ஒரு மனிதரின் உறுதி காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றிஉள்ளார். பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்த மோடி, உறுதி படைத்தவர். அவர் செய்தவற்றில் சிலவற்றை, அமெரிக்காவில் நாம் செய்ய வேண்டியது அவசியம்' என பேசியுள்ளார்.இந்தியாவில் பதவி வகித்த எந்த பிரதமராவது, இது போன்ற பெருமையையும், புகழையும் அடைந்திருக்கின்றனரா? 'வளர்ச்சியின் பயன்கள் சிறுபான்மையினருக்கு, குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு சென்றடைய வேண்டுமென்றால், பல புதுமையான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். ஏனென்றால், இந்தியாவின் வளங்களின் மீதான முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு தான்' என்று, 06-.12-.2006 அன்று, அன்றைய பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளதை தான், இன்றைய பிரதமர் மோடி, சுட்டிக் காட்டியுள்ளார்.உங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கூறியதை எடுத்துக் காட்டினால், உடனே, கோயபல்ஸ் பட்டம் சூட்டி விடுவீர்களோ?அப்படி என்றால், என்றோ, எப்போதோ, எந்த கூட்டத்திலோ, ஈ.வெ.ராமசாமி கூறிய, 'கடவுள் இல்லை; இல்லவே இல்லை. கடவுளை கற்பித்தவன் முட்டாள்' என்ற வார்த்தைகளையும், அன்னாரது சிலைகளையும் பொன்மொழியாக பாவித்து, ஒவ்வொரு ஹிந்து ஆலயங்களின் முன்பும், நிப்பாட்டி வைத்து இருக்கிறீர்களே! நீங்களல்லவா நவீன கோயபல்ஸ் வழித்தோன்றல்கள்?உண்மையை எடுத்துரைத்தால் சுடுகிறதோ?

காலநிலை அகதிகளாகி விடக் கூடாது!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நாட்டிலேயே அதிக வெயில் பதிவான நகரங்களில், நம் ஈரோடு, மூன்றாம் இடம் பெற்றுள்ளது. காற்றை கடுமையாக நாம் மாசுபடுத்தி வருவதால், வெப்பம் அதிகரிக்கிறது; பனிப்பாறை பெருமளவில் உருகி, கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது.உயிரினங்கள் வாழ தகுதி உடைய ஒரே கோள், பூமி. அனைவருக்கும் பொதுவான இப்புவியை காப்பது, ஒவ்வொரு மனிதனுக்குமான கடமை.மனிதன் தன் தேவைக்காகவும், பேராசைக்காகவும், பூமியை பல்வேறு வகைகளில் சுரண்டி வருவதால், இயற்கை சமநிலை வேகமாக பாழ்பட்டு வருகிறது.கொடிகட்டி பறக்கும் ரியல் எஸ்டேட் தொழில், புதிய புதிய கட்டுமானங்களால் ஒவ்வொரு ஆண்டும், பல்லாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் மனைகளாக மாறுகின்றன. மலை வளம் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.பெரும் பணக்காரர்கள் எல்லாம், கோடை வாசஸ்தலங்களில் பங்களா வைத்திருக்கின்றனர்.ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் வெப்பத்தை சமாளிக்க, ஒவ்வொருவரும் ஓடிச் சென்று, 'ஏசி' வாங்கி வீட்டில் மாட்டுகிறோம். அதனால் நம் சுற்றுச்சூழல் அதிக வெப்பமடைகிறது. வீட்டைச் சுற்றி, மரங்கள் வளர்ப்போம்; அவை, சுகமான காற்றைத் தரும்.பூமியைக் காக்க முதல் படி, பாலித்தீன் பிளாஸ்டிக் ஒழிப்பு, புகை குறைப்பு, விலங்குகளின் வாழிடத்தில் கட்டடம் கட்டுவதைத் தவிர்ப்பது, அதிக அளவில் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை கண் போன்று பாதுகாத்தல், மலை வளம் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு, மத்திய அரசும், மாநில அரசுகளும் முன்னுரிமை அளித்து, உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்.'அய்யோ... வெயில் தகிக்குதே...' என புலம்புவதை விடுத்து, வெயில் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை கைகோர்த்து செய்தாக வேண்டிய காலம் இது.போர் அகதிகள், உள்நாட்டு வன்முறை அகதிகள், பேரிடர் அகதிகள் என்ற வரிசையில், எதிர்கால மனிதர்கள், காலநிலை அகதிகளாகி விடக்கூடாது.

தேர்தல் ஆணைய பணி படு சூப்பர்!

ஆர்.ரங்கராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு ஊழியரான என் மாமனார், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இறப்பு சான்றிதழ் பெற்று, என் மாமியாருக்கு பென்ஷன் வழங்கப்பட்டது.இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அவரும் இறந்து விட்டார். அவரது இறப்பு சான்றிதழ் பெற்று, பென்ஷனை நிறுத்தியது அரசு; வங்கிக் கணக்குகளும் முடித்து வைக்கப்பட்டன.ஆனால், 2024 லோக்சபா தேர்தல் வரை, நடைபெற்ற அனைத்து தேர்தல்களுக்கும், அவர்கள் இருவரது பெயரிலும், 'பூத் ஸ்லிப்'கள் வழங்கப்பட்டன.ஒவ்வொரு முறை வாக்காளர் சரிபார்ப்பின்போதும், வீட்டிற்கு வரும் பணியாளரிடம், 'அவர்கள் இருவரும் இறந்து விட்டனர்' என்று சொன்னால், ஏதாவது மார்க் செய்து கொண்டு போவரே தவிர, இதுவரை பெயர் நீக்கம் செய்யப்படவில்லை.இதற்காகவே ஒவ்வொரு முறை, சரிபார்ப்பு கூட்டத்திற்கு சென்று விண்ணப்பம் அளித்தாலும், அதை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி எதையும், தேர்தல் அலுவலர் தருவதில்லை. சென்ற தேர்தலின் போது, 'பூத் ஸ்லிப்' கொண்டு வந்த பணியாளரிடம், 'அவர்கள் இறந்து விட்டனர்' என்று சொன்னபோது, 'இதை வைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்யப் போகிறோம்? நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்!' என, எங்களிடமே திணித்துச் சென்று விட்டனர்.இந்த முறை வந்த பணியாளர், எங்களிடம் கொடுக்காமல், கையோடு எடுத்துச் சென்றார்.தேர்தல் ஆணைய பணி, படு சூப்பர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

spr
ஏப் 29, 2024 17:16

"ஒரு மனிதரின் உறுதி காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றிஉள்ளார்" இதில் சந்தேகமே இல்லை சர்வாதிகாரியாகவே இருந்தாலும், அவர் ஒருவர் நல்லவராக இருந்தால் போதும் நாடு முன்னேறும் ஆனால் குடியாட்சி முறையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குறைந்தது பேர்களாவது நல்லவர்களாக இருந்தால் தான் சட்டமே நிறைவேறும் மக்களுக்கு ஒரே ஒரு குறைதான் உண்டு அமுலாக்கத்துறை இத்தனை பேர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தும் இன்னும் ஒருவருக்குக் கூட தண்டனை பெற்றுத் தரவில்லையே என்? சொந்தக் கட்சி உறுப்பினர் மற்றும் கூட்டணியில் இருப்பவர்களை விட்டு வைப்பதிலாவது ஒரு நியாயம் இருக்கு ஆனால் எதிர்க்கட்சிகளை விட்டு வைப்பதில் என்ன நியாயம் இருக்கும்? மதம் இனம் என்றெல்லாம் பாராமல் பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை


M.S.Jayagopal
ஏப் 29, 2024 08:54

வாக்காளர் பதிவேடுகளை பராமரிக்கும் துறைக்கும் பிறப்பு-இறப்பு சான்றுகள் அளிக்கும் துறைக்கும் ஒருங்கிணைப்பு இல்லையோ? அரசின் நிர்வாகம் சாதாரண மக்கள் சிரிக்கும்படி உள்ளது அரசு ஊழியர்கள் இதற்காக வெட்கப்பட்டு தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் அவர்கள் தங்கள் பொறுப்பை உணரவேண்டும்


Dharmavaan
ஏப் 29, 2024 07:08

நேரு குடும்பம் நம் நாட்டின் சாபக்கேடு


D.Ambujavalli
ஏப் 29, 2024 06:59

இந்த நிலை நாமெல்லாம் இறந்த பிறகு கூட, ஒருவேளை இறந்தபிறகு மட்டுமே தான் நம் பெயர்கள் லிஸ்டில் வந்தாலும் வியப்பில்லை


chennai sivakumar
ஏப் 29, 2024 11:26

இது போல என்னுடைய பாட்டியின் பெயரில் புகழ் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தில் இருந்து இன்னும் ஆண்டு அறிக்கை எல்லாம் கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது நேரில் சென்று சொன்னேன் e மெயில் அனுப்பினேன் கடிதம் எழுதினேன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொன்னேன் ஒன்றும் நடக்கவில்லை சரி என்று விட்டு விட்டேன் ???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை