உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சட்டங்களில் வேண்டும் திருத்தம்!

சட்டங்களில் வேண்டும் திருத்தம்!

ஸ்ரீனிவாச சர்மா, ஹைதராபாதில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜூன் 4ம் தேதிக்குப் பின் ஊழல்வாதிகள் சிறையில் தள்ளப்படுவர்' என, பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். ஆனால், ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் முன்ஜாமினும், பின் ஜாமினும் வாங்கி கொண்டு, சுதந்திரமாக நம் கண் முன் நடமாடுவதை பார்த்தால், மோடியின் சபதம் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். இதற்கு சரியான உதாரணம், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். என்னதான் என்னை பிடித்து சிறையில் தள்ளினாலும், முதல்வர் பதவியை உதற மாட்டேன் என பிடிவாதமாக இருந்து, தற்போது இடைக்கால ஜாமினும் பெற்று, தேர்தல் பிரசாரத்தில் வாய்ச்சொல் வீரராக வலம் வருகிறார்.சிறிய, சிறிய குற்றங்களுக்கு கூட சாதாரண மக்களை தண்டிக்கும் நீதித் துறை, சில அரசியல்வாதிகளிடம் மட்டும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறதோ என்ற எண்ணமும் சில நேரம் எழுகிறது. இது, நம் ஜனநாயகத்துக்கும், இறையாண்மைக்கும் ஏற்புடையது அல்ல.ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று, தன் ரயில்வே அமைச்சர் பதவியை அன்று ராஜினாமா செய்தார் லால் பகதுார் சாஸ்திரி. அந்த விபத்துக்கு எந்த வகையிலும், அவர் காரணமில்லை என்றாலும், தார்மீக பொறுப்பேற்று பதவியை துாக்கி எறிந்தார்.ஆனால் இன்று ஊழலும், முறைகேடும் செய்து சிறை சென்றவர்கள், ஜாமின் பெற்று நம்மை ஆளும் இடத்தில் அமர்ந்து, மீண்டும் அதே ஊழல், முறைகேடுகளை செய்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. ஆகவே, மோடி மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், ஊழல், முறைகேடு வழக்குகளில் சிறை சென்றவர்கள் மீதான வழக்குகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விசாரித்து முடித்து, தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தங்களை செய்ய வேண்டும்.அதுவே, ஊழல்வாதிகளுக்கு சிறந்த பாடமாக இருக்கும்!--

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமே!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், சிலையோ, தெருவோ, நுாலகமோ, ஆட்டோ ஸ்டாண்டோ, பஸ் ஸ்டாண்டோ, அரசு வளாகங்களோ இல்லாத ஊர்களே தமிழகத்தில் இல்லை. அத்தனை விளம்பரங்கள்! இவை போதாதென்று, சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஸ்டாண்ட், கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம், மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றிற்கும் கருணாநிதி பெயர், ரேஷன் கடைகளில், அரசு அலுவலகங்களில் படம், அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கருணாநிதி மேலே போட்டுக் கொள்ளும் துண்டின் மஞ்சள் நிற வர்ணம் அடிப்பு, அவர் பெயரில் அரசு விருதுகள், போன்றவை.ஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றவர்களுக்குக் கூட, இத்தனை விளம்பரங்கள் கிடையாது. தி.மு.க.,வில் ஒரு சிலர், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது கொடுக்கப்பட வேண்டும் என்று கூடக் கூறி வருகின்றனர்.தற்போதைய, 2024- - 25ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில், கருணாநிதி பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. எதற்கு இத்தகைய பெருமை?உண்மையிலேயே நல்ல குணத்துடன் திகழ்ந்தவர் என்றால் சேர்க்கலாம்; தவறில்லை. எப்படி ஜெயலலிதாவின் ஆடம்பர வாழ்க்கையை, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்அவர் சிக்கிய விவகாரத்தை பள்ளிப் பாடப் புத்தகத்தில் சேர்க்க முடியாதோ, அது போல, அண்ணாவின் மறைவிற்குப் பின் கருணாநிதி எப்படி வஞ்சகமாக தி.மு.க., தலைமையைக் கைப்பற்றினார்; எப்படி மாட்டிக் கொள்ளாமல் லஞ்ச, ஊழல்கள் செய்தார்; எப்படி கட்சி, ஆட்சியை தன் குடும்பத்தை விட்டு வெளியே போகாமல் பார்த்துக் கொண்டார்; காங்., இந்திராவை வசைபாடிய தருணங்கள் என எழுத முடியாத பல பக்கங்கள் உள்ளன. தேவையில்லாமல், மாணவர்கள் மனதில் அரசியல் எனும் நஞ்சைப் பாய்ச்சும் வேலைகளை தி.மு.க., மேற்கொள்வதைத் தவிர்த்தல் நல்லது. போறாத குறைக்கு, பாடப் புத்தகங்களில் அரசு கருப்பு சிவப்பு சாயம் பூசியுள்ளது, வேதனையளிக்கிறது; கண்டிக்கத்தக்கது.தமிழுக்காகவே வாழ்ந்தவர்கள் பலர் இருக்கும்போது, தமிழைத் தான் வாழ, அரசியல் செய்ய தவறாக உபயோகப்படுத்திக் கொண்டவர்களுக்கு பாடப் புத்தகங்களில் இடம் கொடுப்பது, ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம்; கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியது. எதுவுமே அளவுக்கு அதிகமானால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இந்த தேவையற்ற விளம்பரத் திணிப்பு தொடர்ந்து நடைபெற்றால், கருணாநிதி பற்றி, மக்கள் மனங்களில், விருப்புக்கு பதிலாக, வெறுப்பே ஏற்படக்கூடும்.----------

ஆம் ஆத்மிக்கு பாடம் புகட்டுவர்!

என். வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆம் ஆத்மி கட்சி எம்.பி.,யான சுவாதி மீது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் நடத்திய கொடூரமான தாக்குதல் குறித்து இதுவரை, 'இண்டியா' கூட்டணி தலைவர்கள் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. பெண்ணுரிமை பேசும் சோனியா, பிரியங்கா, கனிமொழி ஆகியோரும் சுவாதிக்கு நடந்த கொடுமை பற்றி வாயே திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.'சுவாதி தன்னிச்சையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு கூறவில்லை. பா.ஜ., துாண்டுதலின் படியே, வீண் பழி சுமத்துகிறார்' என்கின்றனர், ஆம் ஆத்மி கட்சியினர்.கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல இருக்கிறது ஆம் ஆத்மி கட்சியினர் நடந்து கொள்ளும் விதம். 'டில்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்ற அப்பாவி மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமையை கண்டித்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு நியாயம் வழங்க ஏன் மறுக்கிறார்' என்று கேட்கிறார் சுவாதி.இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. மாறாக, தன் உதவியாளரை பாதுகாப்பது போல, பா.ஜ., அலுவலகம் வரை கண்டன பேரணி நடத்த முயற்சிக்கிறார்.நியாயப்படி பார்த்தால், சுவாதி மீது தன் உதவியாளர் நடத்திய தாக்குதலை அரவிந்த் கெஜ்ரிவால் கண்டித்திருக்க வேண்டும். உதவியாளரையும், உடனே, பணியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்திருக்க வேண்டும்.அதை செய்யாமல், பா.ஜ., துாண்டுதலால் தான் சுவாதி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுகிறார் என்பது சுத்த அபத்தம். சுவாதிக்கு நடந்த வன்கொடுமையால், டில்லி லோக்சபா தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவர் என்பதில் சந்தேகமில்லை.----------


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
மே 23, 2024 16:13

ஆகவே, மோடி மீண்டும் பிரதமராகும் பட்சத்தில், ஊழல், முறைகேடு வழக்குகளில் சிறை சென்றவர்கள் தண்டனை இப்படி இருக்கவேண்டும், இப்படி ஆட்டம் செய்வீர்களா மோடி அவர்களே "தவறு கண்டேன் சுட்டேன், சொத்து அரசு கருவூலத்திற்கு மாற்றப்பட்டது"


chennai sivakumar
மே 23, 2024 09:01

நிலமை இப்படியே நீடித்தால் வெள்ளைக்காரன் நல்லவன் ஆகி விடுவான் திரும்பவும் பழைய குருடி கதைதான்


D.Ambujavalli
மே 23, 2024 07:00

எத்தனை சாதனைகள் இவையெல்லாம் மாணவர்களுக்கு எவ்வளவு உபயோகமான படிப்பினைகள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை