உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வைகோவுக்கு பாடம் புகட்டுங்கள்!

வைகோவுக்கு பாடம் புகட்டுங்கள்!

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வின் வாரிசு அரசியலுக்கு எதிராக வைகோ செய்த கலகமும், தொண்டர்களின் உயிர் தியாகமும், சேர்ந்து உருவானது தான் ம.தி.மு.க., என்ற கட்சி. ஆனால் கொடுமை என்னவென்றால், இப்போது இதே ம.தி.மு.க., நிறுவனர் வைகோவின் வாரிசு அரசியலில் மனம் வெதும்பி, ஈரோடு எம்.பி., கணேச மூர்த்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.வைகோவின் கட்சிக்காக மாடாய், ஓடாய் உழைத்து, தேய்ந்து போன நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளம். ஆனால், இதயம் கல்லாகிய வைகோவோ, தன் மனசாட்சியை தி.மு.க.,விடம் அடகு வைத்து, தன்னுடைய வாரிசு துரையை, திருச்சி தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளார். கட்சிக்கு உழைத்த தகுதியான நிர்வாகிகள் பலர் இருக்க, சிகரெட் வியாபாரம் செய்து கொண்டிருந்த தன் மகன் துரையை, கட்சிக்கும், பதவிக்கும் வாரிசாக நியமித்து, குடும்ப அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் வைகோவின் சுயநலத்தை சுட்டெரிக்க, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு ஒரு வழி உள்ளது.வைகோ முன்பு, வாரிசு அரசியலை எதிர்த்து கலகம் செய்து தி.மு.க.,வில் இருந்து வெளியேறியதை போல், இன்று ம.தி.மு.க.,வில் உள்ள அனைவரும், கூண்டோடு விலக வேண்டும். சுயநல வைகோவின், குடும்ப அரசியல் கூடாரம் காலியாக வேண்டும்.வாரிசுக்கு மட்டும் பதவி; மற்றவர்களுக்கு மனதில் மட்டுமே இடம் என்ற வைகோவுக்கு இது ஒன்றே, சரியான பாடமாக அமையும்.

சிங்கப்பூராக மாற்றவே முடியாது!

ஜெ.மனோகரன், மதுரை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: புதுச்சேரியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என வாக்குறுதி கொடுத்தார்.பல ஆண்டுகளுக்கு முன், பா.ஜ.,வில் தற்போது இருக்கும் சுப்பிரமணிய சாமி, 'மதுரையை சிங்கப் பூராக மாற்றுவேன்' என, மதுரை மக்களுக்கு வாக்குறுதி அளித்து, எம்.பி., ஆனார்; அதோடு டில்லி பக்கம் சென்றவர் தான்... மதுரை பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை.அதன் பிறகு, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த செல்லுார் ராஜு, 'மதுரையை, ஆஸ்திரேலியாவின் சிட்னி போல ஆக்குவேன்' எனக் கூறி, எம்.எல்.ஏ.,வாக நீடித்தார்.சில ஆண்டுகளுக்கு முன், சென்னையை சிங்கப்பூராக மாற்றுவதாக, இந்த அரசியல்வாதிகள் சொன்னார்கள். யாருமே இதுவரை, அவரவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை.நம் ஊர்களை, சிங்கப்பூராகவும், சிட்னியாகவும் மாற்றுவது, எளிதான காரியம் அல்ல. முதலில், அடிப்படைக் கட்டமைப்பை மாற்றிய பிறகு தான், அததற்குரிய வளங்களை ஏற்ற வேண்டும். இதைச் செய்வதற்கான போதுமான அறிவு, நம் அரசியல்வாதிகளிடம் கிடையவே கிடையாது; இருந்தாலும், தமக்கு கமிஷன் வருகிறதா என்பதை ஆராய்ந்து, அது கிடைத்தால் மட்டுமே செய்வர். அது கிடைக்க வாய்ப்பில்லையோ, என்னவோ!எனவே, தேர்தல் காலங்களில், பொதுமக்களிடம் ஓட்டு பெறுவதற்காக, இப்படியெல்லாம் பேசுவதை அரசியல்வாதிகள் விட்டு விட வேண்டும். இப்போதைய சமூக வலைதளங்களைப் பார்க்கும்போது மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது புரிகிறது.அரசியல்வாதிகள் இந்த உளறல்களைத் தொடர்ந்தால், மக்கள் இவர்களைப் பார்த்து பைத்தியக்காரர்கள் எனச் சிரிக்கத் துவங்குவர். அந்த நிலைக்குச் செல்வதைத் தவிர்த்து விட்டு, மாற்றி யோசித்து, மக்களுக்காக செயல்பட முன்வருவது நல்லது. முடியாது, தெரியாது என்றால், வீட்டுக்குச் சென்று விடலாம். எங்கள் இடத்தைக் குப்பையாக்கி, எங்கள் காசைக் கரியாக்கி, எங்களுக்கே லஞ்சம் கொடுக்க வேண்டாம்.

இந்த நேரத்தில் எதற்கு ஐ.பி.எல்., போட்டி?

ஆர். பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழ்நாட்டில், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், மின் நுகர்வும் கடந்த காலங்களை விட தற்போது, மிகவும் அதிகரித்தபடி இருக்கிறது.புதிய திட்டங்கள் எதுவும் தீட்டாமல், இருப்பதை வைத்து சமாளிக்கிறது நம் அரசு. சென்னையில் அடிக்கடி மின்வெட்டு நடப்பதாகவும் தெரிகிறது.ஒரு கட்டத்திற்கு மேலே செல்லும்போது, மக்கள் எந்த அளவிற்கு பொறுமை காப்பர் என்பது, அரசியல்வாதிக்கும் தெரியாது, ஆண்டவனுக்கும் தெரியாது; அதை தேர்தலிலே காட்டி விடுவர் என்பதற்கு, தி.மு.க.,வின் முந்தைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே மிகச் சிறந்த உதாரணம்.தற்போதைய அரசு, இதை நினைவில் வைத்துள்ளதா என்பது தெரியவில்லை. ஏனெனில், இந்த நேரத்திலும் கூட, ஐ.பி.எல்., போட்டிகளை நடத்தி, இரவு மின் நுகர்வை, மிகவும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், சென்னையில் அடிக்கடி மின் வினியோகம் தடைபடுகிறது என நினைக்கத் தோன்றுகிறது.ஐ.பி.எல்., தொடரை ஏன் மே மாதம் நடத்தக் கூடாது; அதுவும் பகலில் நடத்தக் கூடாது என்ற கேள்வியும், பாதிக்கப்படுவோர் மனதில் எழாமல் இல்லை. ஏனெனில், தேர்வு காலம் இது; படிக்கும் பிள்ளைகளுக்கு, படிக்கும் நேரத்தில், மனதை அலைபாய விடும் வகையிலான போட்டி இது. எல்லா பிரச்னையுமாக சேர்ந்து, சாமானியன் தலையில் விழுகிறது. அரசும், அதிகாரிகளும் கவனிப்பரா?

சிசேரியனை தவிர்க்க முயல வேண்டும்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை ஐ.ஐ.டி., நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியாவிலேயே தமிழகம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில், சிசேரியன் மூலம் பிரசவம் நடப்பது, அதிகமாக நடப்பது தெரிய வந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில், சிசேரியன் பிரசவம் நடப்பது, சட்டீஸ்கரில் 10 மடங்கும், தமிழகத்தில் 4 மடங்குமாக உயர்ந்துள்ளதாக, அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பிட்ட நட்சத்திரத்தில், நேரத்தில் குழந்தைகள் பிறக்க வேண்டும் என்று சில பெண்கள் விரும்புவதால், இது போன்று நடக்கலாம்.ஆனால், இந்த நடவடிக்கை, தேவையற்ற செலவு ளையும், பாதகமான விளைவுகளையும் பெண்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.மருத்துவ ரீதியாக தேவைப்படாத பட்சத்தில், தனியார் மருத்துவமனைகள், சிசேரியன் பிரசவம் செய்ய முடியாதவாறு, மத்திய, மாநில அரசுகள், கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியது அவசியம்.இது, சாமானிய மக்களின் அனாவசிய செலவுகளை தவிர்க்கவும், பெண்களின் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் நலனையும் பேணிக் காக்க, பெரிதும் உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
ஏப் 09, 2024 23:17

முதலில் நடைபாதை கடைகளையும், கட்சி மாவட்ட வட்ட செயலாளர்கள் தயவில் செய்யப்படும் ஆக்கிரமிப்புளை ஒழித்து, ஆண்டுதோறும் ரோடுகளை போட்டு, தினமும் தெருக்களில் குப்பைகளை வாரி மருந்து தெளித்தாலே கால் வாசி சிங்கப்பூராக மாறிவிடும் தமிழ்நாடு


Baskaran
ஏப் 09, 2024 20:53

வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுத்ததினாலே நீங்க கட்சி துவங்கினீங்க இப்போ நீங்களும் குடும்ப அரசியலை நடத்துறீங்க என்ன வித்தியாசம் இரண்டுபேருக்கும் எதுக்கு உங்களுக்கு ஓட்டு போடணும் சொல்லுங்க?


Azar Mufeen
ஏப் 09, 2024 18:23

பிணத்தை வைத்து நாங்கள்(bjp) அரசியல் செய்பவர்கள் இல்லை நம்பிட்டோம். கணேசமூர்த்தியின் மனைவி பல வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார் இவர் வேற சில காரணத்தால் தற்கொலை செய்திருக்கலாம் இந்த வாசகரின் கற்பனை புல்லரிக்குது.


raja
ஏப் 09, 2024 17:50

அதுக்கு தான் தமிழா உன்னிடம் சொல்வது என்ன வென்றால் திராவிடன் என்று சொல்பவன் அவன் நல்லவன் என்றாலும் உன்னை ஆள அவர்களை தேர்ந்து எடுக்காதே எட்டு கோடி தமிழனின் ஒருவன் கூட இல்லையா சிந்தித்து ஒட்டு பொடுதிருட்டு திராவிட கூட்டத்தை அடித்து விரட்டுவோம்


Anantharaman Srinivasan
ஏப் 09, 2024 22:48

சிந்தித்து யாருக்கு ஓட்டு போடுவது எல்லோரும் திருடர்களே A Known devii is butter than an unknown angel


D.Ambujavalli
ஏப் 09, 2024 15:01

இனிமேல்தான் இவர்களின் உளறல்களை பார்த்து பைத்தியம் என்ன வேண்டுமா? ஏற்கெனவே உதயநிதி, ஸ்டாலின் உளறல்களை வைத்தும், சில இந்நாள் முன்னாள்களின் பேச்சுக்களை கேட்டும் எப்போதோ தீர்மானித்துவிட்டார்கள் மக்கள் ஆனால் ஒன்று, மனஅழுத்தைத்தை மறக்க அவ்வப்போது மீம்ஸ், ட்ரோல்ல்ஸ் கொடுத்து நமக்கு நல்ல கேளிக்கைகளை அளிக்கிறார்கள் அதற்கு நன்றி கூறுவோமே


Sainathan Veeraraghavan
ஏப் 09, 2024 12:48

வைகோ தன்னுடைய மகனை கட்சியின் தலைவராக ஆக்குவதற்காகவே மக்கள் திராவிட முன்னேற்ற கழகத்தை திமுகவிடம் அடமானம் வைத்து விட்டார் கட்சிகளில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் நிலை பரிதாபம் அவர்கள் என்றுமே அடிமைகள் தான் ருபாய் மட்டுமே அவர்களுக்கு சில சமயங்களில் கிடைக்கும் பல நேரங்களில் அதையும் ஆட்டையை போட்டி விடுவார்கள் திருடர்கள்


VENKATASUBRAMANIAN
ஏப் 09, 2024 08:11

வைகோ போல் ஒரு நம்பிக்கை துரோகி யாரும் கிடையாது இவருக்காக தீக்குளித்த ஆன்மாக்கள் இவரை மன்னிக்காது தமிழக மக்கள் இனிமேலாவது சிந்திக்க வேண்டும் இதுபோன்ற அரசியல்வாதிகளை நம்பக்கூடாது உங்கள் குடும்பத்தை பாருங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை