உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / புரிந்து கொள்வாரா பிரதமர்?

புரிந்து கொள்வாரா பிரதமர்?

என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், ஒரு முஸ்லிம் கூட அமைச்சராக இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.மோடியின் பதவி ஏற்பு விழாவில், ஹிந்துமதத் துறவிகள் நிறைய பேர் பங்கேற்றனர்; கிறிஸ்துவ பாதிரியார்களை, முஸ்லிம் மத குருமார்களைக் காணவில்லை.இதிலிருந்தே, முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பா.ஜ., என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டுவது உண்மையாகி விட்டது.எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு அளித்திருப்பதை, பிரதமர் மோடி கடுமையாக எதிர்த்து மேடைகளில் பேசியதால், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு சென்ற தேர்தலில் கிடைத்த இடங்கள், இந்த தேர்தலில் கிடைக்காமல் போய்விட்டன.இந்திய குடியுரிமை சட்டத்தில், ஹிந்துக்கள், சீக்கியர் ஆகியோருக்கு அளித்த முக்கியத்துவத்தை, முஸ்லிம்களுக்கு தராமல் போனதும், பா.ஜ.,வுக்கு லோக்சபா தேர்தலில், பெரும் சரிவை ஏற்படுத்தி விட்டது.நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தற்போது ஆதரவு அளித்தாலும், கடைசி வரை தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பரா என்பதை சொல்ல முடியாது.'நித்ய கண்டம்; பூர்ண ஆயுசு' என்ற நிலையில் தான், பிரதமர் மோடி, ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர வேண்டும்.முஸ்லிம்கள், கிறிஸ்துவர்களைப் பகைத்து கொள்ளக் கூடாது என்கிற விஷயத்தில், திராவிடக் கட்சிகள் தீவிரமாக இருப்பதால் தான், தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சியை நடத்த முடிகிறது.பிரதமர் இதை புரிந்து கொள்வாரா?

பிராயச்சித்தம் தேடுங்கள் கபில்!

ஜி.கோபால், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: லோக்சபா தேர்தல் பிரசாரத்தை முடித்தபின் பிரதமர் மோடி, கன்னியாகுமரி வந்து, தியானம் மேற்கொண்டார்.மோடி, தமிழகத்திற்கு கிளம்பும் முன், காங்., ராஜ்யசபா எம்.பி., கபில் சிபல் நாக்கில் நரம்பில்லாமல், 'கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில், மத்தியில் ஆளும் பா.ஜ., எந்த சாதனைகளும் செய்யவில்லை. எனவே தான், பா.ஜ., தலைவர்கள் தங்கள் பிரசாரங்களில் தாலி, ஓட்டு ஜிஹாத், முஜ்ரா பாரம்பரிய நடனம் போன்ற விவகாரங்களையும், எதிர்கட்சியினரையும் விமர்சித்து வருகின்றனர்.'ஆட்சிக்கு வரும் முன் பிரதமர் மோடி, 60 ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாததை தாங்கள், 60 மாதங்களில் செய்வோம் எனவும், புதிய இந்தியா அமைப்போம் எனவும் குறிப்பிட்டார். 'ஆனால், 120 மாதங்கள் ஆட்சி செய்தும் புதிய இந்தியாவை உருவாக்க பிரதமர் மோடி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?நம் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். பிராயச்சித்தம் தேட கன்னியா குமாரியில் தியானம் செய்கிறார் மோடி' என, விமர்சன அம்பை எடுத்து விடுத்துள்ளார்.பாவம், அவர் விடுத்த அம்பு, 'பூமராங்' போல், அவரையே திருப்பித் தாக்கும் என்று தெரியாமல் உளறி விட்டார்.காங்கிரஸ், 60 ஆண்டுகாலமாக நம்மை ஆண்டும், அது ஒன்றுமே நமக்கு செய்யவில்லை என்பதை, பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டுள்ளார் சிபல்.கருத்துக்குருடராக இருந்தால் என்ன செய்வது!கிட்டத்தட்ட, 720 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது.  ஜம்மு - காஷ்மீரை, தேசிய நீரோட்டத்தில் இணைத்ததா? எல்லை தாண்டி வந்த வர்களுக்கு, சிறப்பு குடியுரிமை அந்தஸ்து கொடுத்து வாழ்வு கொடுத்ததா காங்கிரஸ்? கிரிமினல் குற்றவாளிகளையும், அந்நிய செலாவணி மோசடி பேர்வழிகளையும், அரசியல் கிரிமினல்களையும் தண்டிக்காமல் விடுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொடுத்து, சிரிப்பாய் சிரித்து நிற்கிறார் கபில் சிபல்.இவர் தான் பிராயச்சித்தம் தேட வேண்டும் இனி!

மிருகங்களாகி வரும் மனிதர்கள்!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில், இரண்டு பசு மாடுகளை சிலர் களவாடினர்; அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோடில் சுற்றித் திரியும் மாடுகளும், அடிக்கடி களவாடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான மாடுகள், கசாப்பு கடைக்காரர்களால் உணவுக்காக ஈவு இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. ஆடு, மாடுகளை வண்டியில் ஏற்றும் போது,அடித்து, துன்புறுத்தி மேலே ஏற்றுவது, சிறிய வண்டிகளில் பல ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்வது, ஒன்றன் மேல் ஒன்றாகக் கூட நிற்க வைப்பது, வழியில் போதிய உணவு, தண்ணீர் கொடுக்காமல் அழைத்துச் செல்வது ஆகிய அட்டூழியங்கள் நடக்கின்றன.இதன் காரணமாக போகும் வழியிலேயே சில ஆடு, மாடுகள் இறந்தும் போய்விடுகின்றன. பல இடங்களில், மக்கள்வேதனைப்படும் வகையில் கசாப்புக் கடைகளில் இவை கொல்லப்படுகின்றன.இக்கொடுமைகளைத் தவிர்க்க, நகராட்சி, காவல்துறை, மிருக பாதுகாப்பு அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.பசு மாடுகள் நமக்கு பால் கொடுக்கின்றன. அவற்றின் மூத்திரம், சாணம் போன்றவை, பூச்சிக் கொல்லியாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகின்றன. தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக மக்கள், பசும்பாலையே நம்புகின்றனர். இத்தகைய மனித சமுதாயத்திற்கு நல்லதை செய்துவரும் பசு மாடுகளை, ஆடுகளை நாம் இப்படி கொடுமையாக நடத்தலாமா? கருத்து சுதந்திரம் என்ற போர்வையில், மாட்டுக் கறி சாப்பிட்டோம் என்று பலர் ஊடகங்களில் பெருமைப்பட்டுக் கொள்வதும், விளம்பரப்படுத்திக் கொள்வதும் வேதனையளிப்பது மட்டுமின்றி, வக்கிரபுத்தியின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது.சில நாட்களுக்கு முன், ஒரு குட்டி யானை, கிணற்றிலிருந்து காப்பாற்றப்பட்டது. மேலே வந்தவுடன், நன்றி சொல்லும் விதமாக அந்த யானை, தன்னைக் காப்பாற்றிய இயந்திரம்,அதன் ஓட்டுனரைப் பார்த்து, தும்பிக்கையை உயர்த்தி, பிளிரிச் சென்றதை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்து வியந்தோம்.ஆனால் நாமோ, நமக்கு பயனளிக்கும், உறுதுணையாக இருக்கும் விலங்கினங்களைக் கூட விட்டு வைக்காமல், கொடுமைப் படுத்துகிறோம்; வெட்டி சாப்பிடுகிறோம்.இவற்றைப் பார்த்தால், விலங்குகள் காட்டை விட்டு நாட்டிற்குள் வசிக்கவும், நாட்டிற்குள் மனிதர்கள் என்ற பெயரில் வாழும் மிருகங்கள், காட்டிற்குள் சென்று வசிக்க வேண்டிய நிலையையும் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 12, 2024 15:24

இட ஒதுக்கீடு என்பது குறிப்பிட்ட சாதியினருக்கானது, எனவே அவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு தேவை? மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது ஒன்றே அனைவருக்கும் வேலை வழங்கக்கூடியது, இடஒதுக்கீடு நம் நாட்டை இன்னும் அழித்துவிடும் .....


தமிழ்வேள்
ஜூன் 12, 2024 10:57

திரு வைகை வளவன் கூற்று ஏற்கத்தக்கதல்ல.மத அடிப்படையில் தனி நாடு கோரிப்பெற்றபின், அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும்? தனியாக ஆள்வதற்கு வக்கற்றவர்களுக்கு நாடு எதற்கு? இஸ்லாமிய நாடுகளில் ஹிந்து பார்சி, ஜெயின் சீக்கிய சமூகத்த்வர்கள் மனித தன்மையின்றி கொடுமைப்படுத்தப்பட்டதால் தான் அவர்களுக்கு உயர்பாதுகாப்பு தரும் வகையில் குடியுரிமை தரப்படுகிறதே தவிர, கொன்றவர்களுக்கு குடியுரிமை கேட்பது நகைப்புக்கு உரியதே? இங்கு வந்தும் அவர்கள் வன்கொடுமையை ஈடுபடமாட்டார்கள் என்று உத்தரவாதம் யாரால் தர இயலும் ? சிறுபான்மையை தாஜா செய்யும் போக்கு இனியும் தேவையில்லை. சிறுபான்மையினரின் தயவில் ஹிந்துக்கள் வாழவில்லை...


Venugopal Gopalsamy
ஜூன் 12, 2024 13:10

unmai


veeramani
ஜூன் 12, 2024 09:40

அதாவது சிறுபான்மை மக்கள் யார்? யார்? இந்திய எல்லையில் கடுமையான பாதுகாப்பு கொடுக்கவும் சிங்க் ....புத்த சந்நியாசிகள், பார்சி இனத்தவர், இஸ்லாமியர்கள். காஷ்மீரில் நடக்கும் நமது ஜவான் படுகொலைகளுக்கு காரணம் இந்திய நாட்டிற்கு எதிரான குற்றங்களை தூண்டி விடுகிறது அண்டை பாகிஸ்தான். இத கேட்டுவிட்டு ஆடும் ஒருசிலரால் கோபம் உருவாகிறது எவர் ஒருவர் இந்திய இறையாண்மைக்கு பணிந்து நடக்கிறாரோ அவர்களை இந்திய தேசம் என்றும் கைவிட்டதில்லை


Vadakkuppattu Ramanathan
ஜூன் 12, 2024 05:11

பிரதமர் சிறுபான்மையினரை அழைக்கவில்லை என்று திட்டமாகத் தெரியுமா? அல்லது அவர் அழைத்தும் இவர்கள் செல்லாமல் இருந்திருக்கலாமே? மேலும் சிறுபான்மை சமூகத்தினர் ஒட்டு மொத்தமாக அதுவும் இந்துக்களைப் பழிப்பவர்களுக்கு ஓட்டு போடுவது மிகவும் வருத்தத்தைத் தருகிறது. இதுதான் அவர்கள் பார்க்கும் சமூக நீதியா?


DINAGARAN S
ஜூன் 12, 2024 09:48

இதில் தவறு ஏதும் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை