உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / முதலில் சுடுகாட்டுக்கு பாதை போடுங்க!

முதலில் சுடுகாட்டுக்கு பாதை போடுங்க!

க.சோணையா, திருமங்கலம், மதுரை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், அரசு சார்பில் சிறுபான்மையினருக் கான சலுகைகள் சிலவற்றை அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அதில், கிறிஸ்துவர்களுக்கான கல்லறைகள், முஸ்லிம்களுக்கான கபர்ஸ்தான்கள் இல்லாத மாவட்ட தலைநகரங்களில், புதிய கல்லறை தோட்டம் மற்றும் கபர்ஸ்தான் அமைத்து தரப்படும் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.அதே வேளையில், நாட்டில் அவர்கள் மட்டும் தான் சிறுபான்மையினர் சமூகம் என்பதோடு அல்லாமல், ஹிந்துக்களில் பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களும் சிறுபான்மையின சமூகம் தான் என்பதையும் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இன்றும் எத்தனையோ கிராமங்களில், பட்டியலின மக்களுக்கு முறையான மயான வசதி இல்லை. அப்படியே இருந்தாலும், இடுப்பளவு நீரில் ஆற்றை கடக்கும் நிலையிலும், அரை கி.மீ., துாரத்திற்கு நன்கு விளைந்த நெற்பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவல நிலையில் தான் இருக்கிறது.குறிப்பாக, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, சத்திரம் புளியங்குளம் கிராமத்தில் பட்டி யலின மக்களுக்கான மயானத்திற்கு, 50 ஆண்டு களுக்கு மேலாக சாலை வசதியில்லை. இது குறித்து, பலமுறை கோரிக்கை வைத்தும், எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.அக்கிராமத்தில் ஓராண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது... இறந்த பட்டியலினத்தைச் சேர்ந்த திருக்குமரன் என்பவரின் சடலத்தை, வயல்கள் வழியாக நன்கு விளைந்த நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி சென்ற அவல நிலையை படம் பிடித்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர்.அப்போது இருந்த கலெக்டர், இதுகுறித்து அலுவலர்களிடம் கேட்க, அவர்களோ, 'அக்கிராம மக்கள் இதுவரை மயான சாலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை' என்ற அசால்டான பதிலை தந்திருக்கின்றனர். அதன்பின், விருதுநகர் கலெக்டர் இப்பிரச்சனை குறித்து மேல் நடவடிக்கை எடுத்தாரா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆக, இதுபோன்ற சமூக பிரச்னைகளையும், பொதுப் பிரச்னையாக எடுத்து, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், அவ்வப்போது முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது தான் உண்மையான சமூக நீதி வெளிச்சத்திற்கு வரும்.

வள்ளுவர் பற்றி வாயை திறக்காதீர்கள்!

எஸ்.ராமகிருஷ்ணன். கே.கே.புதுார், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருவள்ளுவர், 'பாரத சனாதன தர்மத்தின் பிரகாசமான துறவி' என்று, கவர்னர் ரவி உயர்வாக கூறியது, திராவிட செம்மல்களை கொதிப்படைய வைத்துள்ளது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.திருக்குறளின் மேன்மையை, பிரதமர் மோடி, கவர்னர் ரவி போன்றோர் அறிந்து வைத்திருக்கும் அளவிற்கு, திராவிடச் செம்மல்கள் அறிந்திருப்பரா என்பது சந்தேகமே!பிரதமர் மோடி, திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்து வருகிறார்; இன்று தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள், 10 திருக்குறளையாவது அர்த்தத்துடன் சொல்வரா...?அதிலும், திருக்குறள் மீது இவர்களது ஆசான் ஈ.வெ.ரா. எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் என்பது உலகமே அறியும். 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவ பெருந்தகை, என்ன தோற்றத்தில் இருந்தார், எந்த நிறத்தில் உடையணிந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது; ஆனால், அவர் ஒரு ஹிந்து சனாதனவாதி என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.மனித குலம் உய்ய எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை வரையறுப்பது தான் சனாதனம்; இதைத்தான் வள்ளுவமும் வலியுறுத்துகிறது.திருக்குறள் முழுக்க முழுக்க ஹிந்து தர்மத்தையே போதிக்கிறது. குறளில் ஹிந்து மதம் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. ஏனெனில், அவர் வாழ்ந்த காலத்தில், ஹிந்து மதம் மட்டுமே இருந்தது; ஆகையால் அதற்கு தனியான பெயர் இல்லை.ஹிந்து மதத்திற்கே உரித்தான, 'அந்தணர், மறுபிறப்பு, ஏழ் பிறப்பு...' என, நிறைய வார்த்தைகள் குறளில் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடவுள் மறுப்புக் கொள்கையை கையில் பிடித்தபடி, ஊரை ஏமாற்றும் திராவிட செம்மல்களுக்கு திருக்குறள் பொருந்தாது.ஏனெனில், முதல் அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துடன் தான் ஆரம்பிக்கிறார் திருவள்ளுவர்; கடவுள் இல்லை என்பவர்களுக்கு திருக்குறள் எப்படி பொருந்தும்?ஹிந்து தர்மத்தை போதிக்கும் ஞானிகள், மகான்கள், சித்த புருஷர்கள் அனைவரும் காவி உடுத்தி இருந்தனர்; அந்த மரபில் தான் வள்ளுவருக்கு காவி உடையும், திருநீறும், ருத்திராட்சமும் அணிவிக்கப்பட்டுள்ளன.வள்ளுவர் போதித்த இறைபக்தி, கள்ளுண்ணாமை, புலன் அடக்கம், புலால் மறுத்தல், பிறன்மனை நோக்காமை, சிற்றின்பம் சேராமை ஆகிய பண்புகள், இவர்களில் எத்தனை பேரிடம் உள்ளது? எனவே, திராவிட மாடல் ஆட்சியாளர்கள், வள்ளுவரை பற்றி வாய் திறவாமல் இருப்பது உத்தமம்!

தமிழக கோவில்களையும் மீட்பாரா மோடி?

ஆர்.பரத்வாஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடிக்கு ஒரு விண்ணப்பம்...தமிழகத்திற்கு ஒரு மோடியாக, அண்ணாமலையை அறிமுகப்படுத்தி வைத்ததற்கு நன்றிகள் கோடி. மதச்சார்பின்மை என்ற பெயரில், ஹிந்து கோவில்களுக்கு செய்யும் அராஜகங்களை காணும் போது, மனம் குமுறுகிறது. எங்கள் மாநிலத்தின் கோவில் நிர்வாக உரிமையை மீட்டுக் கொடுக்க, நீங்கள் தான் எங்களின் நம்பிக்கை... தமிழக கோவில்கள் வருமானத்தில் ஆடம்பர வசதிகளை அதிகாரிகள் மட்டுமே பெறுகின்றனர். ஆனால், கோவில் அர்ச்சகர்களுகு போதிய வருமானம் தர ஏன் மனமில்லை? 'தொலைந்த கோவில் நிலங்களை மீட்டு விட்டோம்' என பெருமை அடித்து கொண்ட அறநிலையத்துறை, அந்த நிலங்களை திருடி யவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? எதற்கெடுத்தாலும், சிதம்பரம் கோவில் வழிபாட்டு முறைகளில் பிரச்னை செய்வதையே தொழிலாக கொண்டிருக்கிறதே தமிழக அரசு... அது ஏன்? கோவில் சொத்துக்கள் வாயிலாக கிடைக்க வேண்டிய வாடகைகள் இன்று வரை மிக குறைவான ரூபாய்களுக்கு குத்தகை விடப்பட்டு இருப்பது ஏன்?- இப்படி பல விவகாரங்களுக்கு விடை தெரியாமல் நொந்து போயுள்ளோம்.கிட்டத்தட்ட, 500 ஆண்டுகள் போராடியும் மீட்க முடியாத அயோத்தி ராமர் கோவிலை மீட்டுக் கொடுத்த பிரதமர் மோடி அவர்களே...தமிழக கோவில்களை பாதுகாக்க பார்லிமென்டில் விவாதம் செய்து, கோவில்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு ஏதேனும் வழி இருக்குமானால், அதை உடனே செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ramesh
ஜன 22, 2024 17:45

திருவள்ளுவர் எந்த மதத்தவராக இருந்தால் என்ன.குறுகிய மனத்துடன் பார்க்காமல் வாழும் நெறிமுறைகளை மக்களுக்கு போதித்தவர் என்று பொருள் கொள்ளுங்கள் .அவருக்கு ஏன் மத சாயம் பூசுகிறீர்கள் .அதனால் தான் அவருடைய குறழ்கள் பலகாலமாக அரசு பஸ்கலில் எழுத பட்டு வருகிறது


DVRR
ஜன 22, 2024 17:12

சிறுபான்மை இதற்கு அர்த்தம் என்ன??? மதத்தின் பிரகாரமா ஜாதியின் பிரகாரமா???மதத்தின் பிரகாரம் என்றால் பார்சிகள்,ஜைன மதத்தவர்கள் புத்த மதத்தவர்கள் மட்டுமே???இவர்கள் 143.6 கோடி இந்திய மக்கள் தொகையில் 1 கோடி பக்கமாக இருக்கின்றார்கள்???முஸ்லிம்கள் இப்போது 21% கிறித்துவர்கள் 7% இவர்கள் எப்படி மைனாரிட்டி மதம் ஆக முடியும்???1947ல் முஸ்லிம்கள் இந்தியாவில் வெறும் 1 கோடி மொத்த 35 கோடியில்???அப்போதும் 3%???எல்லாமே வந்தது முஸ்லீம் சிறுபான்மை என்று இந்த முஸ்லீம் நேரு தான் Indian Constitution ல் சேர்த்த விளைவு???


புதிய வீடியோ