குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக மாணவர் மற்றும் இளைஞர்களை, போதை குழியில் தள்ளி நாசம் செய்யும், போதைப் பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்ட, சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் ஜாபர் சாதிக், தமிழக காவல் துறைக்கு, 10 'சிசிடிவி' கேமராக்களை கொடுத்ததாகவும், அதற்காக அவருக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டதாகவும், தமிழக காவல் துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் கூறியுள்ளது, வேதனையையும், அதிர்ச்சியையும் தந்துள்ளது.அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஊடக செய்தியாளர்களை, துரத்தி துரத்தி கைது செய்து, ஏதோ கொடும் குற்றம் செய்தது போல் அவர்களை, சிறையில் அடைக்கும் காவல் துறை, பெரும் குற்ற பின்னணி உடைய ஜாபர் சாதிக் போன்றவர்களின் உள்நோக்கத்தை ஆராயாமல், அவர்கள் கொடுக்கும் பொருள்களை அகமகிழ்வுடன் வாங்கி கொள்வதும், அவர்களுக்கு நினைவு பரிசை வழங்குவதும், எந்த வகையில் நியாயம், தர்மம்? இது, தேச விரோத குற்ற வாளிகளின் குற்ற செயல்களுக்கு, உறுதுணையாக அமைந்துவிடாதா?சங்கர் ஜிவால், காவல் துறை தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், இருந்தும் சில குற்றவாளிகள், வெளிமாநிலங்களில் பதுங்கி விடுவதாகவும் கூறியுள்ளார். அப்படியானால், இதுவரை தமிழகத்தின் தலைநகர் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, போதைப் பொருள் கடத்தல்களை செவ்வனே நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை கண்காணிக்காமல், அந்த பயங்கர குற்றவாளியை தப்பிக்கவும் விட்டது, யார் குற்றம்?தற்போது, அவரை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர், டில்லியில் கைது செய்துள்ளனர்.இனியாவது தமிழக காவல் துறை, இதன் வாயிலாக பாடம் கற்று, நல்லவர்களை காக்கவும், தீயவர்களை ஒடுக்கவும் முனைப்புடன் செயலாற்றினால், தமிழக மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுவர். போதை பொருட்களின் பிடியிலிருந்து தமிழகம் தப்பிக்கும். தமிழக காவல் துறையின் கண்ணியம், மானம், கப்பலேறாமல் காப்பாற்றப்படும்! தனி மனித ஒழுக்கம் பேணுவோம்!
செ.எட்டீஸ்வரன்,
வழக்க றிஞர், பழனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ -
மெயில்' கடிதம்: 'இது உங்கள் இடம்' பகுதியில் காந்திராஜா என்பவர், 'நீதித்
துறையில் சீர்திருத்தங்கள் தேவை' என்ற தலைப்பில், ஒரு கருத்து பதிவிட்டு
இருந்தார். தேர்வு எழுதி, சிவில் நீதிபதி பதவிக்கு
தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள், வழக்கறிஞர் தொழிலில் அனுபவம்
இல்லாதவர்களாக இருப்பதும், வழக்குகள் தேக்கத்திற்கு ஒரு காரணம் என
தெரிவித்திருந்தார்.சமூகத்தில் தனிமனித ஒழுக்கம் குறைந்து வரும்
சூழ்நிலையில், வழக்குகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாதது. கற்பிக்கும்
கல்வியும், நேர்மையான பொது வாழ்க்கையும் கொண்ட சமூகம் எப்போது உருவாகிறதோ,
அப்போது தான் வழக்குகள் குறையும்.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பாக,
நீதிமன்றத்திற்கு வழக்குகள் வருவது மிகவும் அரிதாக இருந்தது. காரணம், அன்று
வீட்டளவில் அல்லது கிராம அளவில் சமாதானம் பேசி, நியாயமான தீர்வு சொல்லும்
கட்டமைப்பு கிராமங்களில் இருந்தது.தற்போது, கிராமங்களிலும் பொது
நலன் அல்லாமல் சுயநலமாக சிந்திக்கும் மனிதர்களே அதிகம் என்பதால், சிறு
பிரச்னைகள் கூட வழக்குகளாக மாறி, நீதிமன்றங்களின் கதவை தட்டுகின்றன.பேராசை, கெட்ட பழக்கம், தனிமனித ஒழுக்கம் குறைவு ஆகியவையும் வழக்குகள் அதிகரிப்பதற்கு மூல காரணமாக அமைகின்றன. கடவுள்
நம்பிக்கை, தவறு செய்தால் தண்டனை உண்டு என்ற விதியின் மேல் நம்பிக்கை
குறைந்தது, நாகரிகம் என்ற பெயரிலும், பகுத்தறிவு என்ற பெயரிலும் மனிதர்களை
கெடுத்து வைத்துள்ளதால், குற்றங்கள் குறைய வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.எனவே,
வழக்குகள் தேக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இந்தியா
போன்ற வளர்ந்து வரும் சமூகத்திற்கு வழக்குகள் தேக்கம் என்பது பெரிய தடையாக
அமைந்துள்ளது. சமூகத்தில் தனிமனித ஒழுக்கத்தை ஒவ்வொருவரும்
கடைப்பிடித்தாலே, பெரும்பாலான வழக்குகள் குறையும். தேங்கியுள்ள
வழக்குகளுக்கும் விரைவில் தீர்வு பிறக்கும். நம் அறியாமையை என்னவென்று சொல்வது!
அ.அப்பர்சுந்தரம்,
மயிலாடு துறையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில்
யாரும் இனி இஷ்டத்துக்கு மணல் அள்ள முடியாது.கடந்த 2013லேயே,
இதற்கான தீர்ப்பு வெளியாகி உள்ளது. தனியார் யாரும் குவாரி நடத்தக் கூடாது;
மணல் அள்ளக் கூடாது; அரசுக்கு மட்டுமே அந்த உரிமை உண்டு. அதில் கிடைக்கும்
வருவாய் மூலம், பல நலத் திட்டங்களை அரசு மேற்கொள்ளலாம். டாஸ்மாக்கை நம்பி
இருக்க வேண்டாம்.ஆனால், மக்களின் அறியாமையை முதலீடாகக் கொண்டுள்ள
நம் அரசியல்வாதிகள், எக்கச்சக்கமாக புகுந்து விளையாடி, பல குவாரிகளில்
டெண்டர் எடுத்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டனர்.விபரம் அறிந்த ஒரு சில நபர்கள் மட்டும் வழக்கு மேல் வழக்கு போட்டாலும், அதற்கான தீர்வு, சமீபத்தில் தான் கிடைத்துள்ளது. நாம்
தான் இப்படி அறியாமையுடன் இருக்கிறோம் என்றால், நம் இளைய தலைமுறையினர்,
சமூக வலைதளங்களில் மட்டும் மூழ்கி, சமூக சிந்தனை அற்றவர்களாக மாறி
வருகின்றனர்.இறுதியில், தம் உடைமைகளை யாரும் உருவினால் கூட தெரியாமல் போகும் அளவுக்கு நிலைமை செல்லும் போலிருக்கிறது.எனவே
நண்பர்களே... கொஞ்சமாவது பத்திரிகைகளைப் படிக்கும் வழக்கத்தை நம்
பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்போது தான், வரும் தலைமுறையினர்
பிழைத்துக் கொள்வர். அண்டை நாட்டுக்கு சென்று விடுங்கள்!
வி.பத்ரி,
கிளாம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்'
கடிதம்: தி.மு.க., - எம்.பி., ராஜா, பாரத மாதாவையும், கடவுள் ராமரையும்
எதிர்ப்பதாக பேட்டி அளித்துள்ளார்.ராமரை எதிர்ப்பது அவருடைய தனிப்பட்ட
விருப்பம் என்று விட்டு விடலாம். ஒன்றிணைந்த பாரத தேசத்தில்
இருந்தபடி, அதுவும் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியாக இருந்தபடி, 'பாரத
மாதாவை எதிர்ப்பேன்' என்று கூறுவது, தேச விரோதத்தை வெளிப்படுத்தும் பேச்சு.ஒட்டு மொத்த தேசத்தை யும், தேச பக்தர்களையும் இழிவுபடுத்தும் பேச்சு.இந்தியா என்பது ஒரு நாடே இல்லையாம். துண்டு துண்டாக, தனித்தனியாக இருக்கும் நாடுகளாம். மாநிலங்களைத் தான் இப்படி சொல்கிறார்.ஒன்றியம்
என்றால் என்ன? துண்டு துண்டாக இருக்கும் மாநிலங்களை ஒன்றிணைப்பது தானே
ஒன்றியம்? இவர் பேச்சின் போக்கில் போனாலும், ஒவ்வொரு நாட்டுக்கும் செல்ல,
'பாஸ்போர்ட், விசா' வேண்டாமா?இவர் எதற்கு எம்.பி.,யாக இருக்கிறார்?
ராஜினாமா செய்து, 'அரசாட்சி' கோரலாமே? காங்கிரஸ் அரசில் மந்திரி பதவியை
வகித்தபோது, இந்த 'அறிவு' எங்கே போயிற்று?இவ்வளவு அவதியுடன் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம் பிரதர்! சென்று விடுங்கள் ஏதாவது ஒரு அண்டை நாட்டுக்கு!