உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / லட்சியமும், விருப்பமும் ஒன்றாக இருக்கட்டும்!

லட்சியமும், விருப்பமும் ஒன்றாக இருக்கட்டும்!

'இன்டர்நேஷனல் வாலிபால்' விளையாட்டு வீராங்கனையாக ஜொலிக்கும் த.ப.எழில்மதி: என் அண்ணன் பள்ளிக்கு சென்று வந்ததும், மாலையில், 'கொக்கோ' விளையாடுவார். அவருக்காக நான் காத்திருக்கும் நேரத்தில், அங்கு பெண்கள் அணியினர் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை வேடிக்கை பார்ப்பதுடன், பந்தை எடுத்தும் போட்டுக் கொண்டிருப்பேன். பள்ளியில் நன்கு படிக்கும் பெண் என்பதால், 'அண்ணன் விளையாடும் நேரத்தில் நானும் வாலிபால் விளையாடுவேன்' என, அடம் பிடித்து, இந்த விளையாட்டில் சேர்ந்தேன்.அப்பாவும் விளையாட்டில் ஆர்வம் மிகுந்தவர் என்பதால், பெற்றோர் எப்போதும் எங்களை ஊக்குவித்தனர். நான் பிறந்தது, வளர்ந்தது, சேலம் மாவட்டம், ஆத்துார். அங்கு நான் பயின்ற மெட்ரிகுலேஷன் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் வாலிபால் வீரர் என்பதால் சிறந்த பயிற்சி கிடைத்தது. மூன்று ஆண்டு கால பயிற்சி எங்களுக்கு போதுமானதாக இருந்தது. எங்கள் டீம் தான், முதலில் வெளியில் விளையாடி வெற்றி பெற்ற டீம்.குறுவட்டம், மாவட்டம், மண்டலம், மாநிலம் என்ற வரிசையில், நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது எங்கள் அணி, மாநில அளவில் வென்றது. அதற்கு முன், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாநில அளவில் கேப்டனாக விளையாடி இருக்கிறேன்.நான் பிளஸ் 1 படிக்கும் போதே தலா ஒரு தங்கப் பதக்கமும், வெண்கலப் பதக்கமும் வென்றதற்கு, 3 லட்சம் ரூபாய் கிடைத்தது. பிளஸ் 2 வகுப்பில், இரண்டு தங்கப் பதக்கம், 4 லட்சம் ரூபாய், முதல்வர் டிராபியில் மூன்று முறை, 50,000 ரூபாய் பணப் பரிசும் பெற்றிருக்கிறேன். தேசிய அளவில் ஒன்பது தங்கம், நான்கு வெண்கலம் வென்றிருக்கிறேன்.இதுவரை ஏறக்குறைய, 200க்கும் மேற்பட்ட மேட்ச்கள் விளையாடி உள்ளோம். தமிழகம் சார்பில் விளையாடும்போது, ராஜஸ்தானை எதிர்கொண்டோம்.அப்போது எனக்கு, 'ஓவரால் பிளேயர் ஆப் த டோர்னமென்ட்' என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. போட்டி நடைபெற்ற கிராமத்தில் வசிக்கும் மக்கள், தங்களால் இயன்ற சிறு சிறு பரிசுகள் கொடுத்து, என்னை ஊக்குவித்ததை மறக்கவே முடியாது.நான் பி.ஏ., ஆங்கில இலக்கியமும், தொடர்ந்து எம்.பி.ஏ.,வும் முடித்திருக்கிறேன். இப்போதும் கூட யு.பி.எஸ்.சி., தேர்வுக்காக தயாராகி வருகிறேன்.இப்போது நிறைய பெண்கள் ஆர்வத்துடன் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். அவர்களுடைய பெற்றோரும் ஆதரவு தருகின்றனர்.ஆனாலும், தொடர்ந்து விளையாட, போட்டிகள் குறித்த போதிய விழிப்புணர்வு இன்னும் தேவைப்படுகிறது. உங்கள் லட்சியமும், விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை