காளை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் புதுக்கோட்டை மாவட்டம், மாத்துாரைச் சேர்ந்த கருப்பையா:பூர்வீகம், புதுக்கோட்டை மாவட்டம், மங்கதேவன்பட்டி. எங்க ஊர்ல, காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடக்கும். என் பாட்டன், முப்பாட்டன்னு தலைமுறை தலைமுறையாக பெரிய காளை, சின்னக்காளைன்னு இரண்டு சாமிக்காளைகளை வளர்த்தாங்க.என் குடும்பம் தான் சாமி மாடுகளை முதலில் அவிழ்ப்பாங்க; வாடிவாசலில் மாடுகளை அப்புறமாத்தான் அவிழ்ப்பாங்க. வெறும் சாமிக்காளைகளோட நிற்காமல், நாட்டுக்காளைகளை வளர்க்கவும், ஜல்லிக்கட்டில் விடவும் ஆசை வந்துச்சு. புலிக்குளம், தஞ்சாவூர் குட்டை, கண்ணபுரம், காட்டு மாடு, கெடை மாடு, தேனி மறைமாடு, காரின்னு நாட்டு ரக மாடுகளைத் தேடி வாங்கத் துவங்கினேன்.இப்படியே, எட்டு ஆண்டில், 33 காளைகளை வாங்கிட்டேன். பசு மாடுகளையும் வளர்க்குறதால, தேவையான காளைகளைக் கொண்டு இனப்பெருக்கம் செய்து, ஐந்து ஜல்லிக்கட்டுக் காளைகளை உருவாக்கியிருக்கேன். இப்போது, 38 பேரு கட்டுத்தறியில் நிற்கிறானுக!இரண்டு சாமி மாடுகளை, கோவில் விழாக்களில் அவிழ்க்கிறேன். மற்ற மாடுகளை ஜல்லிக்கட்டுகளில் அவிழ்க்கிறேன். வெறும் வார்த்தைகளில் இத்தனையும் சொல்லிட்டேன். ஆனால், மாடு வளர்க்குறது ரொம்ப கஷ்டம். தினமும் இதை கவனிக்க ஆறு பேரை வேலைக்கு வைத்திருக்கிறேன்.ஜல்லிக்கட்டுக்கு மாடுகளை பழக்கிக் கொண்டு போக, என்னை மாதிரி ஆர்வம் கொண்ட, 15 இளந்தாரி பசங்களை வைத்திருக்கிறேன். இவங்க ஜல்லிக்கட்டு நடக்குற நாலு மாசமும் எங்க கூடவே இருப்பாங்க.நடைபயிற்சி, மண்ணைக் கொம்பால் குத்திக் கிளற வைக்குறது, நீச்சல், ஆட்டம், போக்கு காட்ட வைக்குறதுன்னு பயிற்சிங்க போகும். சில காளைகளை அவிழ்க்குறப்போ ஓடி காடுகளில் பதுங்கிடும்; மாசக்கணக்கில் பிடிக்க முடியாது.இதுவரை வண்டி, சைக்கிள்கள், வெள்ளிக்காசு, தங்கக்காசு, கட்டில், பிரிஜ், வாஷிங் மிஷின்னு நிறைய ஜெயித்திருக்கின்றன என் காளைகள். அந்த பரிசுகளை, ஜல்லிக்கட்டு போட்டிகளை புதுசா நடத்துறவங்களுக்குகொடுத்துடுவேன்.என் மாடுகள் ஜெயிக்கணும் என்ற நினைப்பு ரெண்டாம்பட்சம் தான். நாட்டு மாடுகளை வளர்க்கணும், அவற்றை பாதுகாக்கணும் அதுதான் என் நோக்கம்! காளைகள் வளர்க்க ஏகப்பட்ட செலவு ஆகும்; பிரச்னைகளும் அதிகம். ஆனாலும், எங்க காலத்துக்குப் பிறகும் இந்த மாடுகளுடனான பந்தம் வழிவழியாக தொடரணும். இந்த பிறப்பிற்கு அர்த்தம் காசு பணம், நிலம் நீச்சுல இல்ல; ஆடு மாடுகளோட சேர்ந்து வாழ்றதுல தான் இருக்கு.