| ADDED : மே 07, 2024 06:29 AM
தார்வாட்: இன்று நடக்கும் ஓட்டுப் பதிவில் ஓட்டு போட்டு விட்டு, அதற்கான அடையாள மையை காண்பித்தால், 5 ரூபாய்க்கு இட்லி வழங்குவதாக, தெருவோர தள்ளுவண்டி வியாபாரி ஒருவர் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக தார்வாட் உட்பட 14 லோக்சபா தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்காக மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களிடம் பல வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளனர்.இந்நிலையில், தார்வாட் மாவட்டம் துர்கத்பெயில் சதுக்கத்தை சேர்ந்த பாஸ்கர் டோங்க்ரே, புதிய வகையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளார். இன்று ஓட்டுப்பதிவு செய்தவர்கள், அதற்கான அடையாள மையை காண்பித்தால், 5 ரூபாய்க்கு இட்லி வழங்கப்படும்' என அறிவிப்பு பலகை வைத்துஉள்ளார்.இது குறித்து பாஸ்கர் டோங்க்ரே கூறியதாவது:ஒவ்வொரு தேர்தலிலும் நகர்ப்புற பகுதிகளில் தான் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக உள்ளது. எனவே, வழக்கமாக இரண்டு இட்லிகள் அடங்கிய ஒரு பிளேட் 10 ரூபாய்க்கு விற்று வருகிறேன். இன்று நடக்கும் ஓட்டுப்பதிவில், ஓட்டு போட்டவர்கள், அதற்கான அடையாள மையை காண்பித்தால், ஐந்து ரூபாய்க்கு ஒரு பிளேட் இட்லி வழங்க முடிவு செய்துள்ளேன்.முதன் முறையாக இதை செயல்படுத்துகிறேன். குறைந்த பட்சம் 500 பேருக்கு ஐந்து ரூபாய்க்கு இட்லி வழங்க முடிவு செய்துள்ளேன். எத்தனை பேர் ஓட்டு போட்டு விட்டு, இங்கு வருவார்கள் என்று தெரியாது. இன்று காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை இட்லி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.