புதுச்சேரி: பராமரிப்பு இன்றி அழிந்து வரும் உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்திற்கு, புதுச்சேரி அரசு புத்துயிர் கொடுக்க வேண்டும்.புதுச்சேரி உப்பளத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1992ம் ஆண்டு இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.இங்கு, 400 மீட்டர் ஓடு தளம், புல்வெளி மைதானம், வீரர்கள் தங்குமிடம், பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டது. இத்துடன், கால்பந்து, நீளம், உயரம் தாண்டுதல், ஹாக்கி மைதானம், வாலிபால், கூடைப்பந்து மைதானங்களும் அமைக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ரூ. 80 லட்சம் மதிப்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட இம்மைதானத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் பயிற்சி மேற்கொண்டனர். பல்வேறு போட்டிகளில் சாதித்தனர். காலப்போக்கில், சரியான பராமரிப்பின்றி, விளையாட்டு மைதானம் பாழடைந்ததது.தடகள ஓடுபாதை, கால்பந்து மைதானம் சேதமடைந்தது. கடந்த 2021ம் ஆண்டு, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ. 7 கோடி வழங்குவதாக உறுதி அளித்தது. அதில் இதுவரை ரூ. 4.7 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில், 400 மீட்டர் சிந்தடிக் டிராக் அமைக்கும் பணி முடிந்தது. ஆனால், நடுவில் உள்ள கால்பந்து மைதானம் சீரமைக்கப்படாமல் உள்ளது.நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கம்பு வைத்து உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், தடை ஓட்டம் போன்ற விளையாட்டுகளுக்கு தேவையான உபகரணங்களும் அமைக்கவில்லை. மைதானம் முழுதும் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடக்கிறது. மலைபோல குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கழிவறைகள் சேதமடைந்துள்ளன.முதல்வர் ரங்கசாமி விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இளைஞர், மாணவர்களுக்கான விளையாட்டிற்கு உதவும் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தை பார்வையிட்டு, மைதானத்திற்கு புத்துயிர் அளித்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.