புதுச்சேரி: சிவராந்தகம் கிராம சாலையில் உள்ள பள்ளத்தில், தொடர்ச்சியாக செல்லும் கனரக வாகனங்களால் அதிர்வு ஏற்பட்டு வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.விழுப்புரம்- நாகப்பட்டினம் நான்குவழி சாலையில், கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணி நடக்கிறது. இதற்காக வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.அதன்படி, புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு, விழுப்புரம் நோக்கி செல்லும் வாகனங்கள், அரியூர், சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு, திருபுவனை வழியாக செல்கிறது. மதகடிப்பட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் கலிதீர்த்தாள்குப்பம், பி.எஸ்.பாளையம், வாதானுார், செல்லிப்பட்டு, பத்துகண்ணு வழியாக வில்லியனுார் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில், மாற்று பாதையாக அறிவிக்கப்பட்டுள்ள சிவராந்தகம், கீழூர், மண்டகப்பட்டு சாலைகள் கிராம சாலைகள். இதில், பஸ்கள், 50 டன் அளவுக்கு சரக்கு ஏற்றி செல்லும் மெகா சைஸ் லாரிகள், டிப்பர் லாரிகள், கண்டெய்னர்கள் தொடர்ச்சியாக செல்கிறது. இதன் காரணமாக, சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் வாகனங்கள் ஏறி இறங்கி செல்லும்போது அதிர்வு ஏற்பட்டு, அருகில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இப்பகுதி சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.