கொபே: உலக 'பாரா' தடகளத்தின் குண்டு எறிதலில் இந்திய வீரர் சச்சின் கிலாரி தங்கம் வென்றார்.ஜப்பானில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான குண்டு எறிதல் 'எப்46' பிரிவு பைனலில் அதிகபட்சமாக 16.30 மீ., எறிந்த இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது, உலக சாம்பியன்ஷிப் அரங்கில் இவரது 2வது தங்கம். ஏற்கனவே கடந்த ஆண்டு பாரிசில் நடந்த போட்டியில் தங்கம் வென்றிருந்தார். தவிர இவர், தனது சொந்த ஆசிய சாதனையை முறியடித்தார். கடந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 16.21 மீ., எறிந்து ஆசிய சாதனை படைத்திருந்தார். மகாராஷ்டிராவை சேர்ந்த சச்சின் கிலாரி 34, பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட விபத்தால் இடது கையில் பாதிப்பு ஏற்பட்டது.இதுகுறித்து சச்சின் கூறுகையில், ''உலக சாம்பியன்ஷிப் அரங்கில் மீண்டும் தங்கம் வென்றது மகிழ்ச்சி. இதன்மூலம் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சிப்பேன்,'' என்றார்.இப்போட்டியில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான முகமது யாசர் (8வது இடம், 14.62 மீ.,), ரோகித் குமார் (13வது இடம்) ஏமாற்றினர்.
தரம்பிர் 'வெண்கலம்'
ஆண்களுக்கான 'கிளப் த்ரோ-எப்51' பைனலில் அதிகபட்சமாக 33.61 மீ., எறிந்த இந்தியாவின் தரம்பிர் 3வது இடம் பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார். தவிர இவர், பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் பிரனவ் சூர்மா (33.10 மீ.,) 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
இந்தியா அபாரம்
இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்கள் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. இதன்மூலம் உலக 'பாரா' சாம்பியன்ஷிப் அரங்கில் அதிக பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தது இந்தியா. இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த பாரிசில் நடந்த உலக 'பாரா' சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் உட்பட 10 பதக்கம் வென்றது அதிகபட்சமாக இருந்தது.முதலிரண்டு இடங்களில் சீனா (18 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம்), பிரேசில் (17 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) உள்ளன.