| ADDED : ஆக 17, 2024 07:21 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், 2018ம் ஆண்டு, செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சமுதாய நலக்கூடம் அமைப்பதற்காக, 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன்பின், கட்டுமானப் பணிகள் ஓராண்டாக நடந்து முடிந்தது. ஆனால், சமுதாய நலக்கூடத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.மேலும், கட்டி முடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்திற்கு, கூரை அமைத்தல் உள்ளிட்ட கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, கடந்த ஆண்டு 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதற்கான பணிகளும் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், இன்னும் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.இது குறித்து, அப்பகுதிவாசிகள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.பணிகள் நிறைவடைந்து, 46 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், மழை மற்றும் புயலால் சேதமடைந்து வீணாவதற்குள், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.