மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், திருத்தேரி, பாரேரி, பெரிய விஞ்சியம்பாக்கம், சின்ன விஞ்சியம்பாக்கம், சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு, 20,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மேலும், வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் வாடகைக்கு தங்கி, மறைமலை நகர், ஒரகடம், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்.இந்த ஊராட்சியில், பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் அம்மா உடற்பயிற்சிக் கூடம் மற்றும் குழந்தைகள் விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்கப்பட்டது.அது, பெரிய விஞ்சியம்பாக்கம் பகுதியில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களிடையே வரவேற்பைப் பெற்றது. உடற்பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்தும், மக்கள் பயன்படுத்த முடியாமல் பூட்டியே கிடக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி இளைஞர்கள் கூறியதாவது:அம்மா உடற்பயிற்சிக் கூடம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா மட்டுமே கண்டது. அதன்பின், பல ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால், அதன் உள்ளே உள்ள உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு மாறி வருகிறது.சிறு மழைக்கே பூங்காவில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே, இந்த உடற்பயிற்சிக் கூடத்தை பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.