| ADDED : ஜன 19, 2024 01:18 AM
சூணாம்பேடு:சித்தாமூர் ஒன்றியம், சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட வில்லிப்பாக்கம் கிராமத்தில், தனியார் கெமிக்கல் உப்பு உற்பத்தி ஆலை உள்ளது.கழிவெளிக்கு அருகே, 5,000 ஏக்கர் பரப்பில் கெமிக்கல் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பில் இருந்து பல்வேறு வேதிப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.இதனால் சுற்று வட்டார கிராமத்தின் நிலத்தடி நீர் மாசடைந்து பயன்படுத்த லாயக்கற்றதாக மாறி வருகிறது.இங்கு 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், 20 ஆண்டுகளாக தினக்கூலியாக பணியாற்றி வருகின்றனர்.பணி நிரந்தரம் செய்யக்கோரி பல ஆண்டுகளாக பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர்.தனியார் கெமிக்கல் உப்பு உற்பத்தி ஆலையின் முன், ஒப்பந்ததாரர்களை நீக்கிவிட்டு நேரடியாக தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த சூணாம்பேடு போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, தனியார் கெமிக்கல் உப்பு உற்பத்தி ஆலை நிர்வாக அதிகாரிகளிடம் அழைத்து சென்று பேச்சு நடத்தப்பட்டது.இதில் அடுத்த சில நாட்களில் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியரிடம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.அதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.