| ADDED : மே 19, 2024 12:29 AM
சென்னை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மாம்பலம் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. மொத்தம் ஐந்து நடைமேடைகள் உள்ளன. தினமும் 32,000த்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.அருகேவுள்ள தி.நகரில், பெரிய ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் அமைந்து உள்ளதால், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் பயணியர் கூட்டம் அலைமோதும்.பயணியரின் வருகைக்கு ஏற்றார்போல், ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இருப்பினும், போதிய அளவில் நடைமேடைகளில் நகரும் படிக்கட்டு வசதி இல்லாததால், பயணியர் கடும் அவதிப்படுகின்றனர். இதற்கிடையே, அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 14.70 கோடி ரூபாய் மதிப்பில், இந்த ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:மாம்பலம் ரயில் நிலையத்தில் தினமும் 225க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தவிர, சில விரைவு ரயில்களும் நின்று செல்கின்றன. இந்த ரயில் நிலையத்தை 14.70 கோடியில் மேம்படுத்தும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.புதிய டிக்கெட் அலுவலகம், புதிய கூரைகள், மின்துாக்கிகள், நடைமேம்பாலம், பயணியர் டிஜிட்டல் தகவல் பலகை, 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளிட்ட வசதிகளோடு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பணிகளை, வரும் ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து, பயணியரின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.