சென்னை: பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு, 40 சதவீத மானியத்தில் இன்ஜின் வழங்கும் திட்டம், பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக, மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மீன்வளத் துறை சார்பில், பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 சதவீத மானியத்தில், இன்ஜின்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அந்த வகையில், சென்னையில் 100; திருவள்ளூர், செங்கல்பட்டு என, மொத்தம் 335 பேருக்கு மானிய விலையில் இன்ஜின்கள் வழங்கப்பட உள்ளன. அதாவது, 10 புள்ளிகள் குதிரைத் திறன் உள்ள இன்ஜின் ஒன்றின் விலை, 80,000 ரூபாய், இதில், 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மீதம் 48,000 ரூபாய் செலுத்தி இன்ஜின் பெற்றுக் கொள்ளலாம். மானிய இன்ஜின் கோரி விண்ணப்பிக்க, கடந்த ஜூன் மாதம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மீனவர்கள் பலரும் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், பல மாதங்களாகியும், இன்ஜின் வழங்கப்படாமல் விண்ணப்பம் கிடப்பில் போடப்பட்டுள்ளது என, நாட்டுப்படகு மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் சங்க தலைவர் பாரதி கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், மானிய விலையில், நாட்டுப்படகுகளுக்கு, உள் மற்றும் வெளியில் பொருத்தும் இன்ஜின்கள் வழங்கும் திட்டத்தில், சென்னைக்கு 100 இன்ஜின்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒரு கிராமத்திற்கு, இரண்டு என்ற அடிப்படையில் இன்ஜின் வழங்குவது, மீனவர்களை வஞ்சிக்கும் செயல். அந்த 100 இன்ஜின்களையும், தேவையுள்ள காலத்தில் வழங்காமல், பல மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்திருப்பது, மீனவர்களை மேலும், வஞ்சிப்பதாக உள்ளது. இதனால், ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள், கடலுக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே, நாட்டுப்படகுகளுக்கு வழங்க வேண்டிய, மானிய இன்ஜின்களை தாமதப்படுத்தாமல் உடனே வழங்க, மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.