திருவொற்றியூர், திருவொற்றியூர், கல்யாணி செட்டி நகரைச் சேர்ந்த மோகன், இவர் மனைவி சங்கீதா, 35. ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது பக்கத்து வீட்டில், உறவினரான எல்லப்பன், 45, என்பவர் வசிக்கிறார்.இந்நிலையில், சங்கீதா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில், தங்கள் வீட்டு தண்ணீர் தொட்டியில், எல்லப்பன் மலம் மற்றும் சிறுநீர் கலந்து வந்துள்ளார். இதன் காரணமாக, அந்த குடிநீரை பருகிய அனைவருக்கும், உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளன. அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரியிருந்தார்.இதுகுறித்து, எல்லப்பனை அழைத்து போலீசார் விசாரித்த போது, குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். தானும், மோகனும் பங்காளி உறவினர்களாவர். எங்களுக்குள் இருந்த முன்விரோதம் காரணமாக, பழிவாங்கும் நோக்கில், இச்செயல்களில் ஈடுபட்டதாக கூறினார்.இதையடுத்து, திருவொற்றியூர் போலீசார், நேற்று எல்லப்பனை கைது செய்து, அவர் மீது நோய் பரப்புவதற்கு காரணமாக இருந்ததாக, வழக்குப்பதிவு செய்தனர்.அப்போது, எல்லப்பனுக்கு வலிப்பு நோய் மற்றும் சற்று மனநிலை பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.