--நமது நிருபர் குழு-மேட்டுப்பாளையம் - கோவை வரை இயக்கப்பட்ட 'மெமு' ரயில், போத்தனுார் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.மேட்டுப்பாளையம் முதல் கோவை சந்திப்பு வரை, தினமும் ஐந்து முறை 'மெமு' ரயில் இயக்கப்பட்டு வந்தது. இச்சேவையை, கோவையின் தெற்கு பகுதி மக்களுக்கு பயனளிக்கும் வகையில், போத்தனுார் வரை நீட்டிக்க வேண்டுமென, பயணிகள் கோரிக்கை விடுத்தனர். தேவையற்ற அலைச்சல், கால விரயம் தவிர்க்கப்படும் என கூறப்பட்டது.லோக்சபா தேர்தலுக்கு முன், போத்தனுார் சந்திப்பு வரை 'மெமு' ரயில் சேவை நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, காலை, மதியம் மற்றும் மாலை என ஒரு நாளைக்கு மூன்று முறை இச்சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.காலை, 8:20க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் இந்த ரயில், ஒரு மணி நேரம், 10 நிமிடம் பயணித்து, 9:30க்கு போத்தனுார் வந்தடைகிறது. போத்தனுாரில், 9:45க்கு புறப்பட்டு, 10:45க்கு மேட்டுப்பாளையம் சென்றடைகிறது.மதியம், 1:05க்கு மேட்டுப்பாளையத்தில் புறப்படும் இரண்டாவது ரயில், 2:30க்கு போத்தனுார் வர வேண்டும்; ஆனால், 2:20க்கே வந்து விடுகிறது. மதியம், 3:30க்கு போத்தனுாரில் புறப்பட்டு, 4:30க்கு மேட்டுப்பாளையம் செல்கிறது.மூன்றாவது ரயில், மாலை, 6:55க்கு மேட்டுப்பாளையத்தில் கிளம்பி, இரவு, 8:00க்கு போத்தனுார் வந்தடைகிறது. போத்தனுாரில் இரவு, 8:15க்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு, 8.54க்கு சென்றடைகிறது.மேட்டுப்பாளையத்தில் புறப்படும் மெமு ரயில், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், வடகோவை, கோவை சந்திப்பு கடந்து, போத்தனுார் வருகிறது. வழித்தடத்தில் உள்ள ஸ்டேஷன்களை சுற்றியுள்ள மக்களும், இச்சேவையால் மிகுந்த பயனடைகின்றனர்.இந்த ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. காலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் இந்த ரயில், வேலைக்குச் சென்று, திரும்புவோருக்கு பயனுள்ளதாக இருக்கிறது.பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. போத்தனுார் ரயில் பயனர்கள் சங்கத்தினர், பட்டாசு வெடித்து கொண்டாடி, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினர்.'இனி சிரமம் கிடையாது'வெளியூருக்கு சென்றிருந்தேன். கோவை சந்திப்பில் இருந்து போத்தனுாருக்கு 'மெமு' ரயிலில் வந்தேன். பஸ்சில் வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாப்பில் இருந்து டவுன்ஹால், உக்கடம், ஆத்துப்பாலம் வருவதற்குள் வெகுநேரமாகும். அச்சிரமமின்றி, ஐந்தே நிமிடத்தில் வந்து விட்டோம். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.- ஆனந்தராமன் போத்தனுார் 'மெமு' ஒரு வரப்பிரசாதம்'சேலத்தில் இருந்து வந்தேன். போத்தனுார் வர வேண்டுமெனில், கோவை சந்திப்பில் இருந்து வெளியே வந்து, சாந்தி தியேட்டர் பஸ் ஸ்டாப் வரை லக்கேஜ் துாக்கிச் சென்று, போத்தனுார் பஸ்சுக்கு காத்திருக்க வேண்டும். பஸ் எப்போது வரும் என தெரியாது; போக்குவரத்து நெருக்கடியை கடந்து வருவதற்கு, மிகவும் தாமதம் ஏற்பட்டு வந்தது. இப்போது அந்த பிரச்னை இல்லை. தெற்கு பகுதி மக்களுக்கு 'மெமு' ரயில் ஒரு வரப்பிரசாதம்.- கணேசன் வெள்ளலுார்'ஐந்தே நிமிடத்தில் வந்தோம்'சென்னையில் இருந்து ரயிலில் வந்தேன். வழக்கமாக போத்தனுாருக்கு பஸ் அல்லது கால் டாக்ஸியில் வருவேன். பஸ் அல்லது காரில் வரும்போது, ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரமாகும். இப்போது, ஐந்தே நிமிடத்தில் கோவை சந்திப்பில் இருந்து போத்தனுார் வந்து விட்டோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.- வில்லியம் ஒசோரியோ போத்தனுார்
'பெட்டிகளை அதிகரிக்க வேண்டும்'
'நம்ம மேட்டுப்பாளையம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெய்குமார் கூறியதாவது:மேட்டுப்பாளையம் - கோவை மெமு ரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது போத்தனூர் வரை இயக்கப்படுவதால் கூட்டம் மேலும் அதிகரிக்கும்.இதனால் பெண்கள், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதியடைவார்கள். இதனை சரி செய்ய கூடுதலாக 4 பெட்டிகளை இணைத்து, 12 பெட்டிகளுடன் மெமு ரயிலை இயக்க வேண்டும். பராமரிப்பு பணி காரணமாக, தென் மாவட்டங்களில் இருந்து கோவை வரும் ரயில்கள், போத்தனூரில் நிறுத்தப்படுகின்றன.அது போன்ற சூழ்நிலைகளில், இந்த ரயில் மிகவும் பயன் உள்ளதாக அமையும். மேட்டுப்பாளையத்தில் இருந்து போத்தனூர் செல்வோருக்கு பண செலவு, நேர செலவு குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.---