| ADDED : ஜூலை 31, 2024 02:26 AM
அன்னுார்:குன்னத்தூரில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமில், வருவாய்த் துறையில் உதவி தொகை கோரி 208 பேர் மனு அளித்தனர். அன்னுார் தாலுகாவில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட 3வது முகாம் நேற்று குன்னத்தூரில் நடந்தது. குன்னத்தூர், பச்சாபாளையம், நாரணாபுரம் ஆகிய மூன்று ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். முகாமில் 334 மனுக்கள் பெறப்பட்டன.இதில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகை, பட்டா மாறுதல், நில அளவை என வருவாய் துறையில் மட்டும் 208 மனுக்கள் பெறப்பட்டன. அடுத்தபடியாக மருத்துவ துறையில் 35 மனுக்களும், கூட்டுறவுத் துறையில் 23 மனுக்களும், ஊரக வளர்ச்சித் துறையில் 21 மனுக்களும் பெறப்பட்டன. வருவாய் துறை அதிகாரிகள் உள்ள அரங்கில் மட்டும் மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தங்கள் விண்ணப்பங்களை அளித்தனர். மற்ற 14 அரங்குகளும் காற்று வாங்கின. நகர்ப்புற வளர்ச்சி துறை உள்ளிட்ட சில துறைகளில் ஒரு மனு கூட பெறப்படவில்லை. பச்சாபாளையம் மற்றும் நாரணாபுரம் ஊராட்சியில் இருந்து முகாம் நடக்கும் இடம் அதிக தொலைவு என்பதால் அதிக மக்கள் பங்கேற்க முடியவில்லை.கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் ஊராட்சி தலைவர்கள் கீதா தங்கராஜ், ரவிச்சந்திரன், ஈஸ்வரி ஆகியோர் பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரன், தாசில்தார் நித்தில வள்ளி மற்றும் 15 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். மூன்று ஊராட்சிகளுக்கும் சேர்ந்து 334 மனுக்கள் மட்டுமே பெறப்பட்டன.