கோவை:கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (இ.இ.பி.சி.,) சார்பில், இரண்டுநாள் கண்காட்சி, கருத்தரங்கு நேற்று துவங்கியது. துவக்க விழாவில், இ.இ.பி.சி., சேர்மன் அருண்குமார் கரோடியா தலைமை வகித்தார்.விழாவில், மத்திய வர்த்தக துறை இணை செயலர் விபுல் பன்சால் பேசியதாவது: இந்தியாவிற்கு இது ஒரு நல்ல முன்னேற்ற காலமாக உள்ளது. பல குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி 3.7 சதவீதத்திலிருந்து, 8.5 சதவீதமாக கடந்த 10 ஆண்டுகளில் உயர்ந்துள் ளது. இன்ஜினியரிங் பொருட் களின் ஏற்றுமதியின் பங்கு 26 சதவீதமாக இருந்து வருகிறது. ஏற்றுமதி வர்த்தகம் வரும் 2030ம் ஆண்டில், ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பை எட்ட வேண்டுமானால், ஆண்டுக்கு 12 சதவீத வளர்ச்சி இருக்க வேண்டும். இந்த வளர்ச்சி, வெளிநாடுகளின் காரணிகளாக உள்ளது. இருப்பினும், இன்ஜினியரிங் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம், மேலும் பலரை ஒருங்கிணைத்து, கண்காட்சிகளை நடத்தி இலக்கை அடைய உதவ வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயலர் அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், இந்தியாவிற்கு தேவையான வாகன உதிரி பாகங்கள், 35 சதவீதம் தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்றன. உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம், என்றார்.விழாவில், சிறந்த ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு இ.இ.பி.சி., ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டன.கண்காட்சியில், சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள் அரங்குகளை அமைத்திருந்தன. பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்கள், டிட்கோ, டாடா ஸ்டீல், சீமென்ஸ், ஜாகுவார், லேலாண்ட், லேன்ட்ரோவர், ஏதர், சி.எம்.டி.ஐ.,சி.எஸ்.ஆர்.ஐ., உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கருத்தரங்குகளில் பங்கேற்றனர்.