வால்பாறை: வால்பாறை, அய்யர்பாடியில் வங்கி ஏ.டி.எம்., மையம் காட்சிப்பொருளாக மாறியதால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். வால்பாறையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் உள்ளது அய்யர்பாடி எஸ்டேட். இங்குள்ள போஸ்ட் ஆபீஸ் அருகில், தனியார் வங்கி ஏ.டி.எம்., கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இதனால், ரொட்டிக்கடை, பாரளை, அய்யர்பாடி, கவர்க்கல் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களும், சுற்றுலா பயணியரும் பயனடைந்தனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, இந்த ஏ.டி.எம்., மையம் பூட்டியே கிடப்பதால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, தேயிலை எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, எங்களது கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படுகிறது. வால்பாறை நகருக்கு சென்று பணம் எடுத்து வர இயலாத நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு அய்யர்பாடி போஸ்ட் ஆபீஸ் அருகில், தனியார் வங்கி ஏ.டி.எம்., அமைக்கப்பட்டது. ஆனால், இடையிடையே ஏ.டி.எம்., மிஷினில் பணம் இல்லை எனக்கூறி கடந்த ஆறு மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால், பணம் எடுக்க 8 கி.மீ. தொலைவு பயணித்து வால்பாறை நகருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, தொழிலாளர்கள், சுற்றுலா பயணியர் நலன் கருதி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் சார்பில், அய்யர்பாடி போஸ்ட் ஆபீஸ் அருகில், ஏ.டி.எம்., அமைக்க வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.