| ADDED : ஜன 09, 2024 10:39 PM
அன்னுார்:'இந்துக்களின் 500 ஆண்டு கால கனவு, மோடி ஆட்சியில் நனவாகியுள்ளது,' என மத்திய அமைச்சர் முருகன் அன்னுாரில் தெரிவித்தார்.அயோத்தியில் வருகிற 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.மீன்வளம் மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன் நேற்று முன்தினம் இரவு, அன்னுார் ரோட்டரி சங்கத்தில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து ராமர் படம், கும்பாபிஷேக அழைப்பிதழ், அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட அட்சதை ஆகியவற்றை வழங்கினார்.மத்திய அமைச்சர் பேசுகையில், ''பாரத நாட்டில் இந்துக்களின் 500 ஆண்டு கால கனவான ராமர் கோவில் மோடி ஆட்சியில் நனவாகியுள்ளது. அன்றைய தினம் வாய்ப்புள்ளவர்கள் அயோத்தி செல்லலாம். முடியாதவர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி தீபாவளி பண்டிகை போல் கொண்டாட வேண்டும். அயோத்தி செல்ல இரண்டு மாதங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் சுந்தரம் மற்றும் நிர்வாகிகள், அமைச்சரிடம், 'கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விவசாய நிலங்கள் வாங்கவோ விற்கவும் முடியாமல் முடக்கப்பட்டன. ஆனால் அதன் பிறகு நெடுஞ்சாலை பணியும் துவங்கவில்லை. முடக்கமும் நீக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முடக்கிய நிலங்களை விடுவிக்க வேண்டும் அல்லது நெடுஞ்சாலை பணிகளை துவக்க வேண்டும்,' என்றனர்.அமைச்சர், விவசாயிகள் பாதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க தலைவர் வரதராஜ், செயலாளர் கௌதம சந்திரன், முன்னாள் தலைவர்கள் மனோகரன், நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.