கடலுார்: கடலுார் மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட அதிகமாக நடப்பாண்டில் மணிலா விவசாயிகள், இயந்திரம் மூலம் நடவு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், எஸ்.புதுார், அம்பலவாணன்பேட்டை, கிருஷ்ணன் குப்பம், கட்டியாங்குப்பம், சத்திரம், வெங்கடாம்பேட்டை உட்பட பல்வேறு கிராமங்களில் 5ஆயிரம் எக் டேர் அளவில் மணிலா பயிரிடப்படுகிறது. அதில் பாரம்பரிய முறைப்படி, களை கொத்தியை பயன்படுத்தி விதைக்கும் முறை உள்ளிட்ட ஆட்கள் மூலம் பயிரிடப்படும் முறைகளில் ஆள் பற்றாக்குறை, அதிக கூலி, நேர விரையம் காரணமாக விவசாயிகள் மணிலா பயிரிடுவதில் சிரமங்களை சந்தித்தனர். சில ஆண்டுகளுக்கு முன் இயந்திர நடவு அறிமுகம் ஆன போது, அதன் மூலம் மணிலாவை பயிரிட்டு முறையாக சாகுபடி செய்யமுடியுமா என தயக்கத்தில் இருந்தனர். ஆனால் இயந்திர நடவு மூலம் பயிரிட்ட விவசாயிகள் சிறந்த பலனை பெற்றதால், அதை நாடும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இயந்திர நடவு முறையில் விவசாயிகளுக்கு கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளதால், கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் இயந்திர நடவு முறைக்கு அதிகளவு விவசாயிகள் ஆர்வம் காட்டி விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தமுள்ள 5ஆயிரம் எக்டேர் மணிலாவில், 3ஆயிரம் எக்டேர் மணிலா இயந்திர நடவு முறை மூலம் விதைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை முடிந்த நிலையில், விவசாயிகள் கார்த்திகை பட்டத்திற்காக மணிலாவை இயந்திர நடவு மூலம் சிறப்பான முறையில் பயிரிட்டுள்ளனர். இயந்திர நடவு மூலம் குறிப்பிட்ட ஈரப்பதத்தில் சரியான ஆழத்தில் மணிலா விதைக்கப்படுவதால் அதன் முளைப்புத்திறன் மேம்படும். இதனால் மகசூல் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். மேலும் வரிசை நடவு செய்வதால் களை பறிப்பு, இடை உழவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதும் எளிதாக உள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு 30 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை செலவாகி றது. குறைந்த பட்சம் 12 மூட்டை முதல் அதிக பட்சம் 18 மூட்டை வரை மகசூல் கிடைக்கும். ஆட்கள் பற்றாக்குறை, அதிக கூலி காரணமாக மணிலா பயிரை மகசூல் செய்வதில் சிரமம் இருந்தது. தற்போது இயந்திர நடவு மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மணிலா பயிரிடுவதில் விவசாயிகளுக்கு ஆர்வம் குறைந்து வரும் நிலையில், மணிலா பயிரிடும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு மானிய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். அதுபோல மணிலா விவசாயிகளுக்கு காலத்தில் தெளிக்க வேண்டிய களைக்கொல்லி மருந்துகள், பராமரிப்பு முறைகள் குறித்து வேளாண்துறையினர் முறையாக ஆலோசனைகள், வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மேலும் மணிலா பயிருக்கு உற்பத்தி மானியம் வழங்க வேண்டும் என்ற நீண்ட நாளைய கோரிக்கையையும் அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.