தர்மபுரி: தர்மபுரி நகரில், 39 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை தொடங்க, நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.தர்மபுரி நகராட்சி, சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் லட்சுமி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். நகராட்சி கமிஷனர் புவனேஸ்வரன் தீர்மானங்கள் குறித்து பேசினார். பின், நகராட்சியின் அவசர கூட்டம் நடந்தது. இதில், தர்மபுரி நகரில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பது தொடர்பாக, நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானம் குறித்து நகராட்சி சேர்மன் மற்றும் கமிஷனர் கூறினர். அந்த தீர்மானத்தை கவுன்சிலர்கள் ஒருமனதாக நிறைவேற்றினர்.அதன்படி, தர்மபுரி நகரில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, பென்னாகரம் மெயின் ரோட்டில், தனியார் பங்களிப்புடன், 39 கோடி ரூபாய் மதிப்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டது. புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டி அதனை பராமரித்து, நகராட்சிக்கு ஆண்டுதோறும் கட்டணம் செலுத்துவதற்கு, இரண்டு நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளி கோரின. இதில் ஒரு ஆண்டிற்கு, 55.40 லட்சம் ரூபாய் கட்டணமாக செலுத்த ஒப்பந்த புள்ளி கோரிய பெரம்பலுரை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.நகராட்சியில் நடக்கும் பணிகள் மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் தீர்மானங்கள் குறித்து, ஏற்கனவே பேசி முடிக்கபட்டதாக கூறப்பட்ட நிலையில், தி.மு.க.,-அ.தி.மு.க., கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டரங்கிற்கு நேற்று, மதியம் 12:10 மணிக்கு வந்தவுடன், 12:12 மணிக்கு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு, 2 நிமிடத்தில் கூட்டத்தை முடித்து கொண்டு அனைவரும் வெளியேறினர்.