| ADDED : ஜூன் 07, 2024 07:27 PM
திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீட்டிலிருந்து வேலை பார்க்கும் ஐ.டி., ஊழியர்களின் மூன்று பேரின் அலைபேசிகளுக்கு சில தினங்களுக்கு முன் தனித்தனியே அழைப்பு வந்தது. எதிர் தரப்பில் வீடியோ காலில் ஆங்கிலத்தில் பேசிய ஒரே நபர் 'நான் சி.பி.ஐ.,யில் இருந்து பேசுகிறேன். உங்கள் பெயரில் பிரபல கூரியர் நிறுவனம் வழியாக வெளி நாடுகளுக்கு போதை பொருள், ஹவாலா பணம் கடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். இதனை வெளியில் தெரிவித்தால் கட்டாயம் சிறையில் தள்ளப்படுவீர்கள்' என மிரட்டி உள்ளார். இதை உண்மை என நம்ப வைப்பதற்காக போலீஸ் அதிகாரிகள் போன்ற உடை அணிந்து அவருடன் மேலும் சிலர் இருந்துள்ளனர்.அப்போது, 'இவ்வழக்கிலிருந்து விடுவிக்க நாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த வேண்டும். அது உடனே உங்கள் வங்கி கணக்கிற்கு மீண்டும் வந்துவிடும்' என கூறினர். இதை உண்மை என நம்பிய ஊழியர்கள் மூன்று பேரும் தலா 9, 10, 6 லட்சம் ரூபாய் என மொத்தம் 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் வங்கி கணக்கிற்கு ஆன்லைனில் அனுப்பினர். சில தினங்கள் கழித்தும் பணம் திரும்பி வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசாருக்கு ஆன்லைனில் புகார் அளித்தனர். வடமாநில கும்பல் இம்மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்த போலீசார் மேல்விசாரணை நடத்துகின்றனர். போலீசார் கூறுகையில், 'சி.பி.ஐ., போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் எனக்கூறி யாரும் அலைபேசியில் உங்களை மிரட்டினால் அச்சப்படாமல் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளியுங்கள்' என்றனர்.