நத்தம்: நத்தம் புதுப்பட்டியில் குடியிருப்புகள் மேல் செல்லும் உயரழுத்த மின்கம்பியால் அச்சம், தார் சாலை இன்றி மண் ரோடால் அவதி, திறந்தவெளி சாக்கடையால் கொசு உற்பத்தி என பல்வேறு பிரச்னைகளுடன் நத்தம் புதுப்பட்டி கிராம மக்கள் அல்லாடுகின்றனர்.குடியிருப்புகளுக்கு மேல் உயர் அழுத்த மின்கம்பிகள் பாதுகாப்பற்ற நிலையில் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர். இதனை மாற்ற கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. இதேபோல் அப்பகுதியில் திறந்த நிலையில் செல்லும் சாக்கடைகளால் சுகாதாரக் கேடு, கொசு தொல்லையால் மக்கள் அவதிப்படுகின்றனர். திருவிழா நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்கம் வேண்டுமென இப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கையும் நிலுவையில் உள்ளது.புதுப்பட்டி களத்து வீடு பகுதியில் வசிக்கும் 30க்கு மேற்பட்ட குடும்பங்கள் சாலை வசதி இன்றி மண் பாதையால் சிரமம் அடைகின்றனர். நடவடிக்கை இல்லை
என்.வி. முருகன், டிரைவர், புதுப்பட்டி: குடியிருப்புகள் மேல் உயர்மின்னழுத்த மின்கம்பிகள் சொல்கிறது. மின்வாரிய அலுவலர்கள், ஊராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. குடியிருப்பு பகுதி மேல் செல்லும் மின்கம்பிகளை மாற்றகோரினால் குடியிருப்பு உரிமையாளர்களிடம் பணம் கேட்கின்றனர். பழுதாகும் தெருவிளக்குகள்
பி. பொன்னுத்தாயி, கூலித் தொழிலாளி: குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளியில் சாக்கடைகள் செல்கின்றன. இதனால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. கொசு தொல்லைகளும் அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதே போல் குடியிருப்பு பகுதிகளுக்குள் குடிநீர் பைப்புகளை அமைத்துத் தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதா கும் தெருவிளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். தெருக்களில் கழிவுநீர்
செல்வம், சமூக ஆர்வலர், நத்தம்: மதுரைதேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பட்டி கிராமத்திற்கு வர 300 மீட்டர் மட்டும் தார் சாலை அமைத்தால் கிராம மக்கள் சென்று வர பயனுள்ளதாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புதுப்பட்டி வரும் சாலை பாதியிலே உள்ளதால் இந்த சாலையை புதுப்பட்டி வரை நீட்டித்து நத்தம்சாலையுடன் இணைக்கலாம். அப்போதுதான் பள்ளி மாணவர்கள் சென்று வர வசதியாக இருக்கும்.புதுப்பட்டி நாயக்கர் தெரு பகுதியில் தெருக்களில் சிமென்ட் சாலை, சாக்கடைவசதி இல்லாததால் தெருக்களில் கழிவுநீர் பாய்கிறது. சாக்கடைகள்அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றார்.