கோபி: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் கோவிலில், இன்று (ஜன.,11ல்) குண்டம் திரு விழாவை முன்னிட்டு, பூ மிதிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக்காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் தேர்த்திருவிழா கடந்த டிச.,28ல், பூச்சாட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், பூ மிதிக்கும் பக்தர்கள் விரதம் கடைப்பிடிக்க துவங்கினர். குண்டம் திருவிழா இன்று காலை, 6:30 மணிக்கு நடக்கிறது. இதனால் பக்தர்கள், மார்கழி மாதத்தின் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கடந்த இரு நாட்களாக வரிசையில் காத்திருக்கின்றனர்.நேற்று காலை, 9:45 மணிக்கு மாவிளக்கு காப்பு கட்டுதல் பூஜை முடிந்ததும், அம்மன் பூதவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அந்த பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல் அம்மன் சன்னதி எதிரேயுள்ள, 60 அடி குண்டத்தில், 10 டன் அளவுக்கு எரிக்கரும்பு எனும் ஊஞ்சமரக்கட்டைகள் குவிக்கப்பட்டுள்ளது.ஆகம விதிப்படி நள்ளிரவில் குண்டம் பற்ற வைத்து, சாணார்பதி வீரமக்கள் இன்று அதிகாலை குண்டம் தயார் செய்வர். பல்வேறு பூஜைகளுக்கு பின், தலைமை பூசாரியை தொடர்ந்து, பக்தர்கள் வரிசையாக பூ மிதிக்க துவங்குவர்.கோவில் வளாகத்தில் ஊர்க்காவல் படை, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டம் திருவிழா முடிந்ததும் நாளை (ஜன.,12ல்) மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டம், 13ல், திருத்தேர் நிலை பெறுதல் மற்றும் மலர் பல்லக்கு, 14ல், கோபியில் தெப்போற்சவம் நடக்கிறது.ஜன.,15 முதல், 20 வரை கோபி, புதுப்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம் ஆகிய இடங்களில் மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. ஜன.,20 இரவு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.