ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, -மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி நடந்து வருகிறது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 1ல் துவங்கி, 19ல் நிறைவடைய உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்கி, 25ல் நிறைவடைய உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வினை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 21,702 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். பிளஸ் 1 தேர்வினை, 22,882 மாணவ-, மாணவிகள் எழுத உள்ளனர். பிளஸ் 2, பிளஸ் 1 தேர்வு எழுத மாவட்டத்தில், 106 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, -மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதிவிறக்கம் செய்து வழங்கும் பணி நடந்து வருகிறது.பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்வு மார்ச், 1ல் 106 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஹால்டிக்கெட்டினை பிளஸ் 2 மாணவர்களுக்கு பதிவிறக்கம் செய்து, அந்தந்த பள்ளி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மாணவ,-மாணவிகளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். தேர்வு நடக்கும் மையங்களில் மாணவ, -மாணவிகளுக்கு தண்ணீர், கழிப்பறை, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அறிவுறுத்தியுள்ளோம்.இவ்வாறு கூறினர்.