ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில், 19.54 லட்சம் வாக்காளர் உள்ளனர்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று வெளியிட்டு, நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கடந்த அக்.,27ல் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 19 லட்சத்து, 46,886 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் சிறப்பு முகாம்கள் மற்றும் ஆன்லைனில், 46,131 விண்ணப்பம் பெறப்பட்டு, 45,462 பேர் சேர்க்கப்பட்டனர். பெயர் நீக்கத்துக்கு, 39,523 படிவங்கள் பெறப்பட்டு, 37,636 பேர் விசாரணைக்கு பின் நீக்கப்பட்டனர். திருத்தங்களுக்கு, 15,396 படிவங்கள் பெறப்பட்டு, 14,592 திருத்தம் செய்யப்பட்டது. மொத்தம் ஒரு லட்சத்து, 1,050 படிவம் பெறப்பட்டு, 97,690 ஏற்கப்பட்டு, 3,360 தள்ளுபடியானது.புதிய தொழில் நுட்பத்தின்படி போட்டோ ஒற்றுமை, பெயர் உள்ளிட்ட விபர ஒற்றுமைப்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக உள்ளவர்களுக்கும் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி போட்டோ ஒற்றுமையாக உள்ளதாக, 29,893 பேர் கண்டறியப்பட்டு, படிவம் பெற்று, 13,133 பெயர் நீக்கப்பட்டது. பெயர் உட்பட விபர ஒற்றுமை, 3,389 கண்டறியப்பட்டு, உரியவர்களிடம் படிவம் பெற்று, 1,273 பெயர்நீக்கப்பட்டது. தற்போதைய நிலையில், 18 - 19 வயதுடையோர், 15,252 பேரும்; 20 முதல், 25 வயதினர், 25,280 பேரும் இணைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகள், 13,054 பேர் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பின், 7,826 வாக்காளர்கள் கூடுதலாக இடம் பெற்றுள்ளனர். தற்போது மாவட்டத்தில், 19 லட்சத்து, 54,712 வாக்காளர்கள் உள்ளனர். இவ்வாறு கூறினார்.அந்தியூர் தொகுதியில் குறைந்த எண்ணிக்கையாக இரண்டு லட்சத்து, 16,123 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதி இரண்டு லட்சத்து, 95,732 வாக்காளர்களுடன் மாவட்டத்தில் பெரிய தொகுதியாக உள்ளது. அனைத்து தொகுதியிலும் ஆண்களைவிட பெண் வாக்காளர் அதிகம். எட்டு தொகுதிகளிலும் சேர்த்து ஆண்களைவிட பெண்கள், 60,612 பேர் அதிகம் உள்ளனர்.