| ADDED : டிச 06, 2025 05:52 AM
கள்ளக்குறிச்சி: மஞ்சப்பை திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத பள்ளி, கல்லுாரிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திக்குறிப்பு; ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்று சூழலுக்கு உகந்த மஞ்சப்பை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தை மேன்மேலும் ஊக்குவிக்கும் பொருட்டு, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் உள்ள 3 பள்ளிகள், 3 கல்லுாரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல் பரிசாக ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். விருப்பமும், தகுதியும் உள்ள நிறுவனங்கள் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள் கலெக்டர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து தாள்களிலும் தனி நபர் அல்லது அமைப்பு தலைவர் கையொப்பமிட்டிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜன., 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.