| ADDED : டிச 30, 2025 05:14 AM
கரூர்: கரூர் நகரின் முக்கிய பகுதியாக செங்குந்தபுரம் உள்ளது. இங்குள்ள, 11 கிராஸ்களில் இரண்டு பக்கமும் செல்லக்கூடிய வகையில் தெருக்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் குடோன்கள் பல உள்ளன. அதேபோல, வர்த்தக பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்த தெருக்களில், ஆங்காங்கே காய்கறி தரைக்கடைகளும் உள்ளன. இதனால், எப்போதும் இப்பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படும். இதுபோக, டூவீலர் ஒர்க் ஷாப், கணினி மையம், டீக்கடை, உணவகம், சிறு துணிக்கடை போன்றவை உள்ளன. இப்பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். டெக்ஸ்டைல்ஸ், குடோன்களுக்கு வரும் வேன்கள், மினி லாரிகள், லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.அதிலும், கரூர் செங்குந்தபுரம், 80 அடி சாலையில் வங்கிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அதில் பார்க்கிங் வசதியில்லாமல், சாலையோரத்தில் இருபுறத்திலும் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். சாலையில், வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. காலை, மாலை நேரங்களில் நெரிசல் காரணமாக வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன. குறிப்பாக, நடந்து செல்வோரும், டூவீலரில் செல்வோரும் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இப்பகுதியில் தங்குதடையின்றி போக்குவரத்து நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.