| ADDED : ஆக 14, 2024 08:52 PM
குன்னுார் : குன்னுாரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழையால், 30 அடி உயர தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன.குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. குன்னுாரில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 36 மி.மீ., மழையளவு பதிவானது.இந்நிலையில், வெலிங்டன் காமராஜபுரம் பகுதியில் அய்யம்மாள் என்பவரின் குடியிருப்பு அருகே, பேரட்டி ஊராட்சி சார்பில் சமீபத்தில் கட்டப்பட்ட, 30 அடி உயரம் கொண்ட தடுப்புச்சுவர், மழையால் இடிந்து விழுந்தது. அதில், குடியிருப்பு பகுதி நடைபாதையும் சரிந்தது. வீடுகள் அந்தரத்தில் தொங்குவதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தடுப்புச் சுவர் கட்டித்தர வேண்டும்.