உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தமிழகம் வளம் பெற உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்: சேலம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் பேச்சு

தமிழகம் வளம் பெற உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்: சேலம் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் பேச்சு

சேலம் : ''இந்தியாவும், தமிழகமும் வளம் பெற வேண்டுமானால் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்,'' என, சேலம் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி பேசினார்.சேலம் லோக்சபா தொகுதியில், 'இண்டியா' கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் செல்வகணபதி, செவ்வாய்ப்பேட்டை, கிச்சிப்பாளையம், காந்தி மகான் தெரு உள்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவில், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பிரதமர் மோடி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டார். ஒட்டுமொத்த தொழிலும் நலிவடைந்து விட்டது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் விலைவாசி உயர்ந்துவிட்டது. நெசவுத்தொழில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கச்சா எண்ணெய் விலை இறங்கிய நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதால் விலைவாசி உயர்ந்துவிட்டது. அரிசி சிப்பம் விலையும்உ யர்ந்து விட்டது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்நது வருகிறது. மாநில உரிமைகளை பறிக்க நினைக்கும் மோடி அரசை நாம் வீழ்த்த வேண்டும்.வரலாறு காணாத வெள்ளம் வந்தபோது தமிழகத்தை பார்க்கக்கூடாத வராத கல்நெஞ்சம் கொண்ட பிரதமர், தற்போது இந்த அரசியல் சூழலில் ஓட்டு வாங்குவதற்கு மட்டும், ௮ முறை வந்துள்ளார். இதில் இருந்தே, பிரதமர் மனதில் தமிழகத்திற்கான மதிப்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. நம் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அரசு மருத்துவ கல்லுாரிகளில் நம் குழந்தைகள் படிக்க முடியவில்லை. மத்திய அரசு, 'நீட்' தேர்வை கொண்டு வந்ததே இதற்கு காரணம். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 'நீட்' தேர்வு அனுமதிக்கவில்லை. இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, 'நீட்' தேர்வை அனுமதித்தார். இதனால் அனிதா முதல் ஜெகதீஷ் வரை, 27 மாணவர்கள் உயிரை மாய்த்துள்ளனர். மோடியுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் இ.பி.எஸ்.,க்கு அளிக்கும் ஓட்டும், பிரதமருக்கு அளிக்கும் ஓட்டும் ஒன்றுதான். 3 ஆண்டு காலமாக முதல்வர் ஸ்டாலின் பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். பெண்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் வழங்கும் உரிமை தொகை, பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் விடியல் பயணம், கல்லுாரி மாணவிகளுக்கு நகை கடன், மகளிர் உதவி குழு கடன் தள்ளுபடி என, பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். இந்தியாவும், தமிழகமும் வளம் பெற வேண்டுமானால் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மேலும் இறுதிக்கட்ட பிரச்சாரமாக சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நகர பேருந்து நிலையம் பகுதியில் தமிழக அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ