சிவகங்கை : சிவகங்கையில் நேற்று நடந்த வேட்பு மனு பரிசீலனையில் கட்சி, சுயேச்சை உள்ளிட்ட 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.சிவகங்கை லோக்சபா தொகுதியில் போட்டியிட பா.ஜ., தேவநாதன், காங்.,- கார்த்தி எம்.பி., அ.தி.மு.க., - சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சி - எழிலரசி, பகுஜன் சமாஜ் - ரஞ்சித் குமார், சுயேச்சைகள் உட்பட 28 பேர் 39 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று கலெக்டர் ஆஷா அஜித், தேர்தல் பார்வையாளர் (பொது) எஸ்.ஹரீஸ் தலைமையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன், தாசில்தார் (சட்டம் ஒழுங்கு) ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன் பங்கேற்றனர்.பா.ஜ.,- காங்.,- அ.தி.மு.க.,- நாம் தமிழர் கட்சி- பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அ.தி.மு.க., மாற்று வேட்பாளர் ரத்தினம், பா.ஜ., மாற்று வேட்பாளர் கரிஷ்மா, காங்., மாற்று வேட்பாளர் சஞ்சய், பகுஜன் சமாஜ் மாற்று வேட்பாளர் வசந்தகுமார் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடியானது. சுயேச்சை வேட்பாளர்கள் பழனிச்சாமி, எம்.ராஜமாணிக்கம், விநாயக மெய் அரசு ஆகியோரின் மனுக்களுக்கு 10 பேர் முன்மொழியவில்லை.மனுவை (12 பி) முழுமையாக பூர்த்தி செய்து தராததால் 3 சுயேச்சைக்களின் மனுக்கள் தள்ளுபடியானது. இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், சுயேச்சை, நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் இந்துஜா ஆகிய 21 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.