தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே, நெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் மகள் ஐஸ்வர்யா, 19. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர். அருகில் உள்ள கிராமமான பூவாளூரை சேர்ந்த, பாஸ்கர் மகன் நவீன், 19, டிப்ளமோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த இவர், எஸ்.சி., எனும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர். திருப்பூர் மாவட்டம், அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த இருவரும், டிச., 31ம் தேதி, நண்பர்கள் முன்னிலையில், திருமணம் செய்து கொண்டு, வீரபாண்டி அருகே வாடகை வீட்டில் தங்கினர். இதை அறிந்த ஐஸ்வர்யாவின் தந்தை மற்றும் உறவினர் சிலர், பல்லடம் போலீசில் பேசி, ஐஸ்வர்யாவை, கடந்த 2ம் தேதி வீட்டிற்கு அழைத்து வந்தனர். மறுநாள், 3ம் தேதி, தந்தை மற்றும் உறவினர்கள் ஐஸ்வர்யாவை கொலை செய்து, எரித்து விட்டதாக, நவீன் வாட்டாத்திக்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் கிராமத்தில், போலீசார் விசாரணை நடத்தினர்.ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், 50, தாய் ரோஜா, 45, ஐஸ்வர்யாவின் உறவினரான 16, 19 வயது பெண்கள், அவர்களின் தாய் உள்ளிட்ட ஐந்து பேரை, தனியார் மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தினர். ஐஸ்வர்யாவை கொலை செய்து எரித்த சாம்பலை அப்புறப்படுத்தி, தடயங்களை மறைக்க முயன்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஐஸ்வர்யாவை கொடுமைப்படுத்தியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. அந்த வீடியோ அடிப்படையிலும், போலீசார் விசாரணை நடத்தினர்.