தேனி: தீவன அபிவிருத்தி திட்டத்திற்காக மாவட்டத்தில் உள்ள தரிசு நிலங்கள் கண்டறிந்து தீவன புற்கள், சோளம் வளர்த்து விவசாயிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.', என மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ஆ.கோயில்ராஜா தெரிவித்தார்.தேனி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் அலுவலகம் லட்சுமிபுரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் 53 கால்நடை மருந்தகங்களும், 48 கிளை நிலையங்கள், தேனி, போடி, பெரியகுளத்தில் கால்நடை அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன. மாவட்ட நோய் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குனர் தலைமையில் இயங்குகிறது. கால்நடைத்துறையின் பணிகள், பறவை காய்ச்சல் கட்டுபாடு, ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கால்நடை மற்றும் பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தினமலர் நாளிதழின் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது: மாவட்டத்தில் கால்நடைகளின் விபரங்கள் பற்றி
மாவட்டத்தில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 275 பசுமாடுகள், 1423 எருமை, 47,699 செம்மறி ஆடுகள், 95,388 வெள்ளாடுகள், 819 பன்றிகள், 40 கோவேரி கழுதைகள், 37 பெரிய குதிரைகள், 26 கழுதைகள், 6 லட்சத்து 13 ஆயிரத்து 587 கோழிகள் உள்ளன. ஒருஙகிணைந்த கணக்கெடுப்புப் பணிகள் விரைவில் துவக்க உள்ளோம். கால்நடை டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளதே
இதற்கு 53 கால்நடை கிளை நிலையங்களில் 19 டாக்டர்கள் பணியிடம் காலியாக இருந்தது. இதனை உடனடியாக நிரப்பப்பட்டு தற்போது அனைத்து கால்நடை கிளை நிலையங்களிலும் டாக்டர்கள் பணியில் உள்ளனர். இதனால் சிகிச்சையில் சிரமங்கள் தவிர்ககப்பட்டு உள்ளன. விவசாயிகள் டாக்டர்கள் மருத்துவமனைகளில் இல்லை என்றால் என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். பல கிளை நிலைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளதே. 22 பேரூராட்சிகளில் உள்ள 7 கால்நடை கிளை நிலைய கட்டடங்கள் சேதமடைந்துள்ளது. ஊராட்சிகளில் 17 கிளை நிலையங்கள் சேதமடைந்திருந்தது. இவற்றை புகைப்படத்துடன் கலெக்டரிடம் சமர்ப்பித்து ஒப்புதலுடன், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சீரமைக்க வலியுறுத்தி உள்ளோம். ஏனெனில் இதில் கால்நடை பராமரிப்புத்துறை நிதி ஒதுக்கீடு செய்வது இல்லை. அதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விரைவில் சேதமடைந்த கட்டடங்கள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோழிக்கழிச்சல் தடுப்பூசி பற்றி கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டால், உடனடியாக அருகில் உள்ள கிளை நிலையங்களுக்கு பாதிக்கப்பட்ட கோழியை துாக்கிச்சென்று இலவச தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பண்ணை உரிமையாளர்களுக்கு நாங்கள் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளோம். கோழிகள் நோய் பாதிக்கப்பட்டால் எங்களை தொடர்பு கொள்ளலாம். பறவை காய்ச்சல் நோய் தடுப்புப் பணிகள் குறித்து
கால்நடைத்துறை இயக்குனர், கலெக்டர் உத்தரவில் தமிழக கேரள எல்லையில் சோதனை செய்து கோழி, கோழித் தீவன வாகனங்களை திருப்பி அனுப்பி வருகிறோம். இதர எல்லையை கடந்து தேனி மாவட்டத்தில் வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிந்து பின்தான் அனுமதிக்கிறோம். தொடர்ந்து கண்காணிப்பு செய்து வருகிறோம். கோமாரி நோய் பாதிப்பு தற்காப்பு பற்றி ஓராண்டில் 6 மாதங்களுக்கு ஒருமுறை கோமாரி நோய் தாக்கும்போது சினை பிடிக்காது. இதனால் உற்பத்தி பாதிக்கும். இனப்பெருக்கம் தடை ஏற்படும். இதனால் கால்நடை கிளை நிலையங்களுக்கு சென்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தி கொள்வது அவசியம். இந்நோய் பாதிப்பால் விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை சந்திக்கின்றனர். தற்போது ஒரு லட்சத்து 10 ஆயிரம் டோஸ் தயார் நிலையில் உள்ளது. கால்நடை இறப்பை தவிர்க்க தடுப்புசி செலுத்துவது கட்டாயம். தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை பற்றி
தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மூலம் புகார்கள் வந்தன. இதனால் வெறிநோய் தடுப்பூசி தேவையான பகுதியில் செலுத்தி வருகிறோம். தேனி , கம்பம், போடி நகராட்சியில் கருத்தடை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. தற்போது வரை 29 ஆண் நாய்கள், 17 பெண் நாய்களுக்கு வழங்கி உள்ளாம். சிகிச்சை முடிந்து முறையாக நாய்களை எல்லைகளில் விட்டுவருகிறோம். வார்டு வாரியாக நாய்களை கணக்கெடுக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. புதிய கட்டடங்களுக்கு பரிந்துரை செய்துள்ளீர்களா கால்நடைத்துறைக்கு என மாவட்டத்தில் உள்ள அனைத்து கட்டடங்களையும் நேரில் ஆய்வு செய்தேன். அதில் 40 ஆண்டுகள் பழமையான புது கட்டடம் கட்ட 12 அலுவலகங்களுக்கு பரிந்துரைத்துள்ளோம். அதில் 2 அனுமதி பெற்றுள்ளது. விரைவில் பணிகள் நடக்க உள்ளன. தீவன அபிவிருத்திக்காக தரிசு நில மேம்பாடு திட்டம் பற்றி
கால்நடைகள் அதிகம் உள்ள மாவட்டம் தேனி. ஆனால் கால்நடை தீவன உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதனால் 5 தாலுகா அளவில் தாசில்தார்களிடம் தரிசுநிலங்களை கண்டறிந்து அந்த இடங்களை வழங்க கோரி கலெக்டர் அனுமதியுடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தரிசு நில விபரங்கள் கிடைத்ததும், அங்கு கால்நடை தீவன புற்கள், சோளம் உள்ளிட்டவை பயிரிட்டு கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தீவனமாக வழங்க திட்டம் உள்ளது. தரிசு நிலங்கள் குறித்த விபரங்கள் கிடைத்தவுடன் பணிகள் முன்னெடுக்கப்படும்.