| ADDED : ஜூன் 25, 2024 12:11 AM
கம்பம் : இருமாநில எல்லையோர நகரங்களான குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.தமிழகத்துடன் கேரளாவை இணைக்கும் எல்லையோர நகரங்களாக தேனி மாவட்டத்தில் குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு உள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும் வந்து செல்கின்றனர். இரு மாநில எல்லையோரங்களில் அந்தந்த மாநில அரசுகள் பல் துறை சோதனை சாவடிகளை அமைத்து கண்கானிப்பு செய்வது வழக்கம். தேனி மாவட்டத்தில் மூன்று வழித்தடங்களிலும் கேரள அரசு முறையாக சோதனை சாவடிகள் அமைத்து தமிழகத்தில் இருந்து வரும் வாகனங்களை முழுமையாக சோதனை செய்து அனுப்புகின்றது. ஆனால் தமிழகம் சார்பில் மூன்று இடங்களிலும் பெயரளவில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சோதனை நடத்துவது இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாரயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பின் பெயரளவில் சோதனை செய்து வருகின்றனர்.குமுளி, கம்பமெட்டு, போடிமெட்டு மூன்று ரோடுகளிலும் எல்லையோரங்களில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும். பகல் மட்டும் என்றில்லாமல் இரவிலும் சோதனை தொடர வேண்டும். அங்கு எஸ்.ஐ அந்தஸ்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனையில் ஈடுபடுத்த வேண்டும். இரவில் இரண்டு ஷிப்டுகளாக போலீசார் சோதனை செய்ய வேண்டும். அப்போது தான் உண்மையில் ஸ்பிரிட், எத்தனால், வெடிபொருள்கள், கஞ்சா, ரேஷன் அரிசி உள்ளிட்ட கடத்தலை தடுக்க உதவும்.தேனி எஸ்.பி. சிவபிரசாத் தன் முகாம் அலுவலகத்துடன் இந்த 3 இடங்களில் சோதனை சாவடிகளிலும் போலீசார் சோதனை செய்வதை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருந்த வேண்டும். அப்போது தான் கடத்தல் முழுமையாக தடுக்கப்படும்.