| ADDED : ஜூலை 09, 2024 07:28 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்திற்கு வழங்கப்படும், பருப்பு, எண்ணெய் வகைகளை தரமாக வினியோகிக்க வேண்டும். தரமற்ற பொருட்களை வினியோகிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டம் கீழ் பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுதும், முழு நேர ரேஷன் கடை 761, பகுதி நேர கடைகள் 377 என, மொத்தம் 1,138 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிறப்பு பொது வினியோக திட்டத்தின் கீழ் மாதம்தோறும் துவரம் பருப்பு- 5.04 லட்சம் கிலோ, பாமாயில் 5.10 லட்சம் கிலோ வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகள் மட்டுமன்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நடத்தும் 6, மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் 10, மீனவர் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 9 ரேஷன் கடைகளிலும், இதே வகையில் பொருட்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்து பொதுமக்கள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் பொது வினியோக திட்ட ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உள்ள, 'ஜி.பி.எஸ்.,' கருவிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வரப்படும் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் தரம் பார்த்து பகுப்பாய்வு மேற்கொள்ள வேண்டும். பகுப்பாய்வு மேற்கொள்ளும் பொழுது சரியில்லாத பொருட்களை அந்த நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பி வைப்பதுடன், அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொது மக்களிடம் விரல் ரேகை பதிவில்லாமல் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.